நீதிமன்றத்தை அவமதித்ததாகக் கூறி கோட்டை நீதவான் தமக்கு எதிராகச் செய்த குறிப்பை சவாலுக்குட்படுத்தி பாராளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர தாக்கல் செய்துள்ள ரிட் மனுவை, அதன் விடயங்களை உறுதிப்படுத்துவதற்காக எதிர்வரும் செப்டெம்பர் 18ஆம் திகதி அழைக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (14) உத்தரவிட்டுள்ளது.
இதன்படி, மனு மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் நீதியரசர் ரொஹான் அபேசூரிய, நீதியரசர்கள் சமத் மொராயஸ் மற்றும் ஆதித்ய படபெந்திகே ஆகியோர் அடங்கிய மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் அன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
திலித் ஜயவீர தொலைக்காட்சி நேர்காணலொன்றில் நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் கருத்து தெரிவித்துள்ளாரா என்பது குறித்து ஆராயுமாறு கோட்டை நீதவான் செய்திருந்த குறிப்பு, இன்று இரண்டாவது நாளாகவும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் பரிசீலிக்கப்பட்டது.
இதன்போது, மனுதாரர் திலித் ஜயவீர சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி, தனது கட்சிக்காரரின் நிரபராதித்துவத்தை உறுதிப்படுத்தும் வகையில், சர்ச்சைக்குரிய தொலைக்காட்சி நேர்காணலை திறந்த நீதிமன்றத்தில் ஒளிபரப்புவதற்கு தேவையான வசதிகளை ஏற்படுத்துமாறு கோரிக்கை விடுத்தார்.
குறித்த கோரிக்கைக்கு அனுமதி வழங்கிய நீதியரசர்கள் குழாம், நேர்காணல் காணொளியை நீதிமன்றத்தில் ஒளிபரப்புவதற்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்துமாறு பதிவாளருக்கு உத்தரவிட்டது.
இதனைத் தொடர்ந்து முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை பரிசீலித்த நீதிமன்றம், ரிட் மனுவை அதன் விடயங்களை உறுதிப்படுத்துவதற்காக செப்டெம்பர் 18ஆம் திகதி மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் அழைக்குமாறு உத்தரவிட்டுள்ளது.








