தெஹிவளை, சிறிசங்கபோ மாவத்தையில் உள்ள வீடொன்றின் மீது நடத்தப்பட்ட கைக்குண்டுத் தாக்குதலில் உயிரிழந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சிறுவர்களின் இறுதிக்கிரியைகள் கல்கிஸ்ஸை பொது மயானத்தில் இடம்பெற்றுள்ளன.
கடந்த 11ஆம் திகதி அதிகாலை 3 மணியளவில் இனந்தெரியாத நபர் ஒருவரால் இந்தக் கைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
சந்தேகநபர் முச்சக்கரவண்டியில் வந்து வீட்டின் கதவைத் தட்டியுள்ளதுடன், வீட்டிலிருந்தவர்கள் கதவைத் திறந்ததும் வீட்டுக்குள் கைக்குண்டை வீசியுள்ளதாக CCTV காட்சிகளை ஆய்வு செய்தபோது தெரியவந்துள்ளது.
இந்தத் தாக்குதலில் தாயின் அன்பை இழந்து தந்தையின் அரவணைப்பில் வளர்ந்து வந்த 17 வயதான கசுன் ரஷ்மிக மற்றும் அவரது 11 வயதான இளைய சகோதரர் துமிந்த கிஹான் ஆகிய இருவரும் உயிரிழந்தனர்.
பலத்த காயமடைந்த இருவரும் களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளனர்.
தாக்குதலில் அவர்களது 55 வயதான தந்தையின் காலிலும் காயம் ஏற்பட்டுள்ளதுடன், அவர் தற்போது அதே வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
எவ்வாறாயினும், குறித்த தந்தை தொடர்பில் எந்தவொரு குற்றச்சாட்டும் இல்லை என பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளின்படி, இந்தக் கைக்குண்டுத் தாக்குதல் தவறான வீட்டை இலக்குவைத்து நடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
களுபோவில வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நபரின் சகோதரரின் வீட்டை இலக்குவைத்து தாக்குதல் நடத்த வந்த சந்தேகநபர்கள், வீடு மாறியதால் இந்தத் துயரச் சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் முச்சக்கரவண்டி பின்னர் இஹல போபே பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் ஸ்தல நீதவான் விசாரணையும் இடம்பெற்றுள்ளது.
சந்தேகநபர்களைக் கைது செய்வதற்காக மூன்று பொலிஸ் குழுக்களின் கீழ் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில், சம்பவம் தொடர்பாக இதுவரை இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.








