எதிர்வரும் இரண்டு ஆண்டுகளில் சூரிய சக்தி, காற்றாலை மற்றும் மின்கல சக்தி மூலம் 2,700 மெகாவோட்டுக்கும் அதிகமான மின்சாரத்தை தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்க எதிர்பார்த்துள்ளதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக தெரிவித்துள்ளார்.
இன்று (11) பாராளுமன்றத்தில் உரையாற்றியபோதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
இதன்படி, அடுத்த இரண்டு ஆண்டுகளில் சூரிய சக்தி மூலம் 1,392 மெகாவோட், காற்றாலை சக்தி மூலம் 370 மெகாவோட் மற்றும் மின்கல சக்தி மூலம் 1,000 மெகாவோட் மின்சாரத்தை தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
மேலும், மேற்கூரைகளில் பொருத்தப்பட்டுள்ள சூரிய மின்கலத் தகடுகள் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் கடந்த காலங்களில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
தற்போது மேற்கூரைகளில் பொருத்தப்பட்டுள்ள சூரிய மின்கலத் தகடுகள் மூலம் சுமார் 2,500 மெகாவோட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
சில சந்தர்ப்பங்களில் மின் உற்பத்தி தேவையை விட அதிகமாக உள்ளதாகக் குறிப்பிட்ட அமைச்சர், குறிப்பாக ஞாயிற்றுக்கிழமைகள் மற்றும் பொது விடுமுறை தினங்களில் இவ்வாறான உபரி மின் உற்பத்தி ஏற்படுவதாகவும் தெரிவித்தார்.
இதனால், தேசிய மின் கட்டமைப்பின் நிலைத்தன்மையைப் பேணுவதற்காக சில சந்தர்ப்பங்களில் சூரிய சக்தி மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் அளவில் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும், மின்கலங்கள் மூலம் மின்சாரத்தைச் சேமிக்கும் முறை அறிமுகப்படுத்தப்படுவதன் மூலம், பகல் நேரங்களில் அதிகமாக உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தைச் சேமித்து வைத்து, இரவு நேரங்களில் அதனைப் பயன்படுத்துவதற்கு எதிர்காலத்தில் எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.








