கர்ப்பகாலத்தில் பராசிட்டமோல் பயன்படுத்துவது பெண் குழந்தைகளின் எதிர்கால கருவுறுதலை பாதிக்கக்கூடும் என டென்மார்க்கில் மேற்கொள்ளப்பட்ட புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
ஆய்வின்படி, கர்ப்பகாலத்தில் பராசிட்டமோல் பயன்படுத்திய பெண்களுக்கு பிறந்த பெண் குழந்தைகளின் கருப்பைகள் சராசரியாக 40 சதவீதம் சிறியதாக இருந்துள்ளன.
அதேபோல், அவர்களின் கருப்பை 13 சதவீதம் சிறியதாகவும், கருமுட்டைகளை உருவாக்கும் கருப்பை நுண்ணறைகள் (ovarian follicles) 23 சதவீதம் குறைவாகவும் காணப்பட்டதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பெண் குழந்தைகள் தங்களது வாழ்நாளில் உருவாகவுள்ள அனைத்து கருப்பை நுண்ணறைகளுடனேயே பிறக்கின்றனர். எனவே, கருப்பை நுண்ணறைகளின் உருவாக்கத்தில் ஏற்படும் பாதிப்பு எதிர்காலத்தில் கருவுறுதல் குறைவதற்கும், இனப்பெருக்க வயது விரைவாகக் குறைவதற்கும் வழிவகுக்கலாம் என விலங்குகள் மீதான ஆய்வுகள் காட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கர்ப்பத்தின் ஆரம்பகாலத்தில் பராசிட்டமோலுக்கு வெளிப்பட்ட பெண் குழந்தைகளிடம், கருப்பையில் உள்ள கருமுட்டைகளின் இருப்பை மதிப்பிடுவதற்குப் பயன்படுத்தப்படும் anti-Müllerian hormone (AMH) அளவும் குறைவாக இருந்ததாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
எனினும், இந்த மாற்றங்கள் மனிதர்களின் எதிர்கால கருவுறுதல் அல்லது மாதவிடாய் நிறுத்த வயதில் தாக்கத்தை ஏற்படுத்துமா என்பது இன்னும் தெரியவில்லை என ஆய்வுக்கு தலைமை வகித்த டென்மார்க்கின் Rigshospitalet மருத்துவமனையைச் சேர்ந்த Dr Margit Bistrup Fischer தெரிவித்துள்ளார்.
இந்த ஆய்வு மக்கள் தொகை மட்டத்திலான தொடர்புகளை மட்டுமே ஆய்வு செய்துள்ளதாகவும், தனிப்பட்ட பெண் அல்லது குழந்தையின் எதிர்கால விளைவுகளை இதன் அடிப்படையில் கணிக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கர்ப்பகாலத்தில் பராசிட்டமோல் பயன்படுத்திய பெண்கள் இந்த ஆய்வு முடிவுகளால் அச்சமடைய வேண்டாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தற்போது, கர்ப்பிணிப் பெண்களுக்கு வலி மற்றும் காய்ச்சலுக்கான முதல் தேர்வு சிகிச்சையாக பராசிட்டமோல் பரிந்துரைக்கப்படுகிறது. இருப்பினும், குறைந்த அளவிலான பயனுள்ள மருந்தை மிகக் குறுகிய காலத்திற்கு மட்டுமே பயன்படுத்துமாறு NHS அறிவுறுத்துகிறது.
இந்நிலையில், புதிய ஆய்வின் முடிவுகள் குறித்து பிரித்தானிய விஞ்ஞானிகள் எச்சரிக்கையுடன் அணுகுமாறு வலியுறுத்தியுள்ளனர்.
Newcastle University-யின் மூத்த விரிவுரையாளர் Dr Gavin Stewart, இந்த ஆய்வின் வடிவமைப்பின் அடிப்படையில் பராசிட்டமோல் காரணமாகவே இந்த மாற்றங்கள் ஏற்பட்டதாகக் கூற முடியாது என தெரிவித்துள்ளார்.
சிறிய ஆய்வுக் குழுவும் அதிக எண்ணிக்கையிலான முடிவுகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளமையும் தவறான நேர்மறை முடிவுகளைத் தெளிவாகப் பிரித்தறிவதை கடினமாக்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
King’s College London-ஐச் சேர்ந்த Prof Franziska Denk-வும், தற்போதைய நிலையில் கர்ப்பிணிப் பெண்கள் தங்களது நடத்தையை மாற்றிக்கொள்ள பரிந்துரைப்பதற்கு இது போதுமான ஆதாரமல்ல என்றும், கர்ப்பிணிப் பெண்கள் கவலைப்படத் தேவையில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த ஆய்வு Human Reproduction Open இதழில் வெளியிடப்பட்டுள்ளது.








