எல்நினோ தாக்கம் காரணமாக இலங்கையின் 8 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
குறித்த மாவட்டங்களில் உள்ள 36 பிரதேச செயலகப் பிரிவுகள் வறட்சியான வானிலையால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதன் காரணமாக 47,368 குடும்பங்களைச் சேர்ந்த 154,167 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வறட்சியின் தாக்கத்தைத் தொடர்ந்து, 35 பிரதேச செயலகப் பிரிவுகளில் வசிக்கும் மக்களுக்கு குடிநீர் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, 40,945 குடும்பங்களைச் சேர்ந்த 132,748 பேருக்கு குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இதில் அதிகளவான குடிநீர் விநியோகம் மொனராகலை மாவட்டத்திற்கு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அங்கு 8 பிரதேச செயலகப் பிரிவுகளைச் சேர்ந்த 13,139 குடும்பங்களின் 42,429 பேருக்கு குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் 8 பிரதேச செயலகப் பிரிவுகளைச் சேர்ந்த 11,142 குடும்பங்களின் 33,394 பேருக்கும் குடிநீர் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், அம்பாறை மாவட்டத்தின் 3 பிரதேச செயலகப் பிரிவுகளில் பாதிக்கப்பட்ட 3,794 குடும்பங்களைச் சேர்ந்த 12,047 பேருக்கு குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது









