மலேரியா மற்றும் தாய்மார்கள், புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கான ரணஜன்னி (Tetanus) நோய்களை ஒழித்த நிலையை தொடர்ந்து 10 ஆண்டுகளாகப் பேணி வருவதற்காக உலக சுகாதார அமைப்பு (WHO) இலங்கைக்கு சிறப்பு அதிகாரப்பூர்வ மதிப்பீட்டு சான்றிதழை வழங்கியுள்ளது.
திமோர்-லெஸ்தேயின் டிலி நகரில் நடைபெறும் WHO தென்கிழக்கு ஆசிய பிராந்தியக் குழுவின் 79ஆவது அமர்வின்போது, சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸவிடம் இந்தச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
WHO பணிப்பாளர் நாயகம் வைத்தியர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயேசஸ் சார்பில் வழங்கப்பட்ட இந்தச் சான்றிதழில், WHO தென்கிழக்கு ஆசிய பிராந்திய அலுவலகத்தின் பொறுப்பதிகாரி கலாநிதி நிலேஷ் புத்தாவின் கையொப்பம் இடம்பெற்றுள்ளது.
இலங்கை 2016ஆம் ஆண்டு WHOவினால் மலேரியா அற்ற நாடாக அதிகாரப்பூர்வமாக சான்றளிக்கப்பட்டது. அதன் பின்னர் 10 ஆண்டுகளாக நாட்டில் மலேரியா மீளப் பரவாமல் தடுப்பதில் இலங்கை பெற்றுள்ள வெற்றியை WHO பாராட்டியுள்ளது.
மாலத்தீவுக்கு அடுத்ததாக தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தில் மலேரியாவை ஒழித்த இரண்டாவது நாடாகவும் இலங்கை திகழ்கிறது.
அதேவேளை, தாய்மார்கள் மற்றும் புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கான ரணஜன்னி நோயை ஒழித்த நிலையை 10 ஆண்டுகளாகத் தொடர்ந்து பேணி வந்தமைக்கும் இலங்கை பாராட்டு பெற்றுள்ளது. கர்ப்பிணித் தாய்மார்களுக்கான ரணஜன்னி தடுப்பூசி திட்டமும் நாடு முழுவதும் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
வலுவான ஆரம்ப சுகாதாரக் கட்டமைப்பு, தொடர்ச்சியான தேசிய அர்ப்பணிப்பு, உயர்ந்த தடுப்பூசி பாதுகாப்பு மற்றும் திறமையான நோய் கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் ஆகியவையே இந்தச் சாதனைகளை அடையவும் நீண்டகாலம் பேணவும் காரணமாக அமைந்துள்ளதாக WHO சுட்டிக்காட்டியுள்ளது.
இந்தச் சாதனைகள் சுகாதாரத் துறையின் முக்கிய மைல்கற்கள் மட்டுமன்றி, இலங்கை மக்களின் உயிர்களைப் பாதுகாத்து ஆரோக்கியமான எதிர்காலத்தை உறுதி செய்வதற்கான நாட்டின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பையும் பிரதிபலிப்பதாக WHO தெரிவித்துள்ளது.









