கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் முஸ்லிம் பாடசாலைகள் அபிவிருத்திப் பிரிவின் ஏற்பாட்டில், “மீலாதுன் நபி விழா – 2026” நிகழ்வு நேற்று (07) திங்கட்கிழமை கல்வி அமைச்சில் சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்வில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.
இதன்போது கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி பிரதி அமைச்சர் வைத்தியர் மதுர செனவிரத்ன, அமைச்சின் செயலாளர் நாலக்க கலுவெவ, பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே, பேராதனைப் பல்கலைக்கழக கலைப் பீடத்தின் அரபு மற்றும் இஸ்லாமிய நாகரிகத் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி எஸ்.எம்.எம். தமீம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
மேலும், அமைச்சின் முஸ்லிம் பாடசாலைகள் அபிவிருத்திப் பிரிவின் பிரதானி மேஜர் என்.டி. நஸுமுத்தீன் உள்ளிட்ட அமைச்சின் அதிகாரிகள், அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களும் நிகழ்வில் பங்கேற்றனர்.இந்நிகழ்வு நபிகள் நாயகம் முஹம்மது (ஸல்) அவர்களின் பிறப்பை நினைவுகூரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.












