ஈரான் நாட்டுக் கொடிகளைத் தாங்கிய கப்பல்கள் இலங்கையின் கடற்பரப்புக்குள் நுழைந்ததாக வெளியான தகவல்களை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் மறுத்துள்ளார். எனினும், இலங்கைக்கு அருகிலுள்ள சர்வதேச கடற்பரப்பில் இயங்கும் பல கப்பல்களை அதிகாரிகள் கண்காணித்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த அமைச்சர், இலங்கையைச் சுற்றியுள்ள கடற்பகுதியில் 47 கப்பல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவற்றில் சில ஈரான் நாட்டைச் சேர்ந்தவை எனவும் குறிப்பிட்டார். எனினும், அவை இலங்கையின் பிராந்தியக் கடற்பரப்புக்கு வெளியே சர்வதேச கடற்பரப்பில் இருப்பதாக அவர் தெரிவித்தார்.
“இலங்கையைச் சுற்றியுள்ள பகுதியில் 47 கப்பல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவை ஈரான் கப்பல்கள் மட்டுமல்ல. சில ஈரானுக்குச் சொந்தமானவை. ஆனால் அவை இலங்கையின் பிராந்தியக் கடற்பரப்புக்கு அப்பால், சர்வதேச கடற்பரப்பில் உள்ளன” என விஜித ஹேரத் தெரிவித்தார்.
தாய்லாந்து மற்றும் மலேசியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த கப்பல்களும் அந்தப் பகுதியில் இயங்கி வருவதாகவும், வர்த்தகக் கப்பல்கள் சர்வதேச கடற்பரப்பில் இருப்பது வழக்கமான விடயம் எனவும் அவர் கூறினார்.
“இலங்கை அரசாங்கத்தைப் பொறுத்தவரை, இந்தக் கப்பல்கள் எமது கடற்பரப்புக்குள் நுழைவதற்கான எந்தவொரு கோரிக்கையையும் நாங்கள் பெறவில்லை. அதற்கான எந்தவொரு அனுமதியையும் நாங்கள் வழங்கவில்லை” என அவர் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், கடந்த வாரம் சில கப்பல்கள் இலங்கையின் 12 கடல் மைல் பிராந்தியக் கடற்பரப்பிற்குள், கரையிலிருந்து 11.4 முதல் 11.6 கடல் மைல் தொலைவில் இருந்ததாகவும், பின்னர் சுமார் 24 கடல் மைல் தொலைவுக்கு நகர்ந்ததாகவும் ஊடகவியலாளர்கள் அமைச்சரிடம் தெரிவித்தனர்.
இதற்கு பதிலளித்த ஹேரத், இலங்கை அதிகாரிகளின் கண்காணிப்புகளின்படி அந்தக் கப்பல்கள் நாட்டின் பிராந்தியக் கடற்பரப்புக்குள் நுழையவில்லை என மீண்டும் வலியுறுத்தினார்.
“கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் இலங்கை வெளிவிவகார அமைச்சுக்கு தகவல் வழங்கி, பல ஈரான் கப்பல்கள் இருப்பதாகவும், அவை தொடர்பில் நாம் அறிந்திருக்கிறோமா, அவை கண்காணிக்கப்படுகின்றனவா என்றும் கேட்டிருந்தது. அதன்படி பாதுகாப்பு அமைச்சுக்கும் துறைமுகங்கள் அமைச்சுக்கும் அறிவிக்கப்பட்டு, அந்தக் கப்பல்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. அவை எமது கடற்பரப்பில் இல்லை” என அவர் தெரிவித்தார்.
அமெரிக்காவின் கட்டுப்பாடுகளுக்கு மத்தியில், பல ஈரான் கொடிக் கப்பல்கள் இலங்கையின் பிரத்தியேக பொருளாதார வலயத்திற்கு (EEZ) அருகில் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக முன்னதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.
இந்தக் கப்பல்கள் இலங்கையின் EEZ-க்கு அருகிலுள்ள பகுதியில் இருந்தபோதிலும், நாட்டின் இறையாண்மைக்குட்பட்ட பிராந்தியக் கடற்பரப்புக்கு வெளியே இருந்ததாக இலங்கை கடற்படையும் தெரிவித்துள்ளது. எனவே, அவை இலங்கையின் நேரடி அதிகார வரம்புக்குள் வராது எனவும் கடற்படை குறிப்பிட்டுள்ளது.
இலங்கையின் பிராந்தியக் கடற்பரப்பு, அதன் அடிப்படைக் கோட்டிலிருந்து 12 கடல் மைல் வரை நீண்டுள்ளது.








