டிட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட வர்த்தக நிறுவனங்களுக்கு ஆதரவளிக்கும் வகையில், சிறு, குறு மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகளை (MSME) மீளச் செயற்படுத்துவதற்கும், அவற்றின் மீட்புப் பணிகளுக்கு மூலதன உதவி வழங்குவதற்கும் இரண்டு முக்கிய கடன் திட்டங்களுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
RE-MSME Disaster Relief Loan Scheme மற்றும் Expanded Disaster Relief (EDR) Loan Scheme ஆகிய இரண்டு திட்டங்களும் 2025 மற்றும் 2026ஆம் ஆண்டுகளில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதுடன், இதற்காக 10,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
இயற்கை அனர்த்தங்களுக்குப் பின்னர் பாதிக்கப்பட்ட வர்த்தக நடவடிக்கைகளை விரைவாக மீள ஆரம்பிப்பதற்குத் தேவையான உடனடி நிதி நிவாரணத்தை வழங்குவதுடன், நாட்டின் பொருளாதார மீட்சியை துரிதப்படுத்துவதும் இந்தத் திட்டங்களின் நோக்கமாகும்.
2026ஆம் ஆண்டு முதல், இந்த இரண்டு திட்டங்களும் ஒருங்கிணைந்த திட்டமாக நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.
இதன் கீழ், சூறாவளியால் பாதிக்கப்பட்ட 3,968 தொழில் நிறுவனங்களுக்கு கடன் வழங்குவதற்காக ஏற்கனவே 8,061.4 மில்லியன் ரூபாய் நிதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், 15 நிதி நிறுவனங்கள் இதில் பங்கேற்றுள்ளன.
இந்தக் கடன் திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பான தகவல்களை நிதி அமைச்சராக ஜனாதிபதி அமைச்சரவைக்கு முன்வைத்தார்.
இதனை அமைச்சரவை அதிகாரப்பூர்வமாக பதிவு செய்துகொண்டுள்ளது.









