சுகததாச தேசிய விளையாட்டு வளாக அதிகாரசபையின் 400, 200 மற்றும் 80 மீற்றர் செயற்கை ஓட்டப்பாதைகளை மீளமைக்கும் திட்டத்திற்காக மீண்டும் கேள்விப்பத்திரங்களை கோருவதற்கு விளையாட்டுத்துறை அமைச்சர் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
1,062.543 மில்லியன் ரூபாய் மதிப்பிடப்பட்டுள்ள இந்தத் திட்டத்திற்கு முன்னதாக 2025 ஒக்டோபர் 21ஆம் திகதியும் 2026 மார்ச் 3ஆம் திகதியும் அமைச்சரவை அனுமதி வழங்கியிருந்தது.
சர்வதேச போட்டி கொள்வனவு நடைமுறையின் கீழ் கேள்விப்பத்திரங்கள் கோரப்பட்ட நிலையில், மூன்று கேள்விப்பத்திரங்கள் கிடைத்திருந்தன.
எனினும், அவற்றை மதிப்பீடு செய்த பின்னர், தகுதி பெற்ற ஒரேயொரு கேள்விப்பத்திரதாரர் மதிப்பிடப்பட்ட செலவை விட 70 சதவீதம் அதிகமான தொகையை கோரியிருந்தமை தெரியவந்தது.
இதனைக் கருத்திற்கொண்டு, நியாயமான செலவில் பொருத்தமான ஒப்பந்ததாரரைத் தெரிவுசெய்வதற்காக கேள்விப்பத்திர நடைமுறையை மீண்டும் ஆரம்பிக்குமாறு உயர்மட்ட கொள்வனவுக் குழு பரிந்துரைத்தது.
அதன்படி, சுகததாச விளையாட்டு வளாகத்தின் செயற்கை ஓட்டப்பாதைகளை மேம்படுத்தும் இந்தத் திட்டத்திற்காக புதிதாக கேள்விப்பத்திரங்களை கோருவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.









