ஜனநாயகம், பொருளாதார மீட்சி, காலநிலை மாற்றத்திற்கான தயார்நிலை மற்றும் சமூகப் பாதுகாப்பு ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் ஒரே தேசிய மீள்திறன் கட்டமைப்பை இலங்கை உருவாக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆன்ட்ரே பிராஞ்சுடன் இடம்பெற்ற சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.மீள்திறன் என்பது தனித்தனி கொள்கைத் துறைகளாக அணுகப்படாமல், ஆட்சி, நிறுவனங்கள் மற்றும் ஒட்டுமொத்த சமூகத்திலும் கட்டியெழுப்பப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனநாயகம் என்பது தேர்தல்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்படக்கூடாது எனத் தெரிவித்த சஜித் பிரேமதாச, சட்டத்தின் ஆட்சி, அதிகாரப் பிரிப்பு, சுயாதீன நிறுவனங்கள், நாடாளுமன்றப் பொறுப்புக்கூறல், வெளிப்படைத்தன்மை, அடிப்படை உரிமைகள் மற்றும் மக்கள் பங்கேற்பு ஆகியவற்றின் மூலம் அது மேலும் வலுப்படுத்தப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.
அரசியல் அதிகாரத்தில் யார் இருந்தாலும் சுயாதீன நிறுவனங்கள் தமது பணிகளை சுயாதீனமாக முன்னெடுக்க வேண்டும் எனவும், அரசியலமைப்பு சீர்திருத்தங்கள் நீண்டகால பாதுகாப்பு ஏற்பாடுகளையும் அதிகார சமநிலையையும் உறுதிப்படுத்தும் வகையில் அமைய வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
எல் நினோ மற்றும் லா நினா போன்ற காலநிலை நிகழ்வுகளால் ஏற்படக்கூடிய அபாயங்களைச் சுட்டிக்காட்டிய அவர், பேரிடர்கள் ஏற்பட்ட பின்னர் நடவடிக்கை எடுக்கும் முறையிலிருந்து விலகி, காலநிலை முன்னறிவிப்புகளை அடிப்படையாகக் கொண்ட முன்கூட்டிய தயார்நிலை மற்றும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் முறைக்கு இலங்கை மாற வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
இத்தகைய காலநிலை நிகழ்வுகள் வெறுமனே வானிலை மாற்றங்கள் அல்ல எனத் தெரிவித்த அவர், விவசாயம், நீர்ப் பாதுகாப்பு, உணவுப் பொருட்களின் விலைகள், வாழ்வாதாரம், எரிசக்தி, சுகாதாரம், வறுமை மற்றும் அரச நிதி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பரந்த பொருளாதார மற்றும் சமூகப் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என எச்சரித்துள்ளார்.
காலநிலை தொடர்பான முன்கூட்டிய எச்சரிக்கைகள் மற்றும் நடவடிக்கைகளுக்காக தேசிய வேலைத்திட்டமொன்றை உருவாக்க வேண்டும் எனவும் அவர் முன்மொழிந்துள்ளார். இதற்காக ஐ.நா. நிறுவனங்கள், இலங்கை அரச நிறுவனங்கள், நிபுணர் அமைப்புகள், பல்கலைக்கழகங்கள், தனியார் துறை மற்றும் சிவில் சமூக அமைப்புகள் ஒருங்கிணைக்கப்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், காலநிலை அபாயங்கள் தேசிய பொருளாதார மற்றும் நிதித் திட்டமிடலில் உள்ளடக்கப்பட வேண்டும் எனவும் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.
பொருளாதார மீட்சி என்பது பொருளாதாரத்தின் மொத்த நிலைத்தன்மையால் மாத்திரம் அளவிடப்படக்கூடாது எனக் குறிப்பிட்ட அவர், மக்களின் கொள்வனவு சக்தி, வேலைவாய்ப்பு, உண்மையான ஊதியங்கள், பிராந்திய சமத்துவம், இளைஞர்களுக்கான வாய்ப்புகள், பெண்களின் பொருளாதாரப் பங்கேற்பு, கிராமப்புற வாழ்வாதாரம் மற்றும் பொது சேவைகளின் தரம் ஆகியவையும் கருத்தில் கொள்ளப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.
“இலங்கை மீள்திறன் தொடர்பில் விரிவாக சிந்திக்க வேண்டும். பொருளாதார, ஜனநாயக, காலநிலை மற்றும் சமூக மீள்திறன்களை தனித்தனி கொள்கைத் துறைகளாகக் கருத முடியாது. ஒரு கட்டமைப்பில் ஏற்படும் அதிர்ச்சி, விரைவாக ஏனைய கட்டமைப்புகளுக்கும் பரவக்கூடும்” என சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
முழு அரச இயந்திரத்தையும் சமூகத்தையும் உள்ளடக்கிய மீள்திறன் அணுகுமுறையே இலங்கைக்கு அவசியம் எனவும், வலுவான நிறுவனங்களை உருவாக்கி, அனைவரும் பயனடையும் பொருளாதாரத்தை உறுதிப்படுத்துவதுடன், காலநிலை மற்றும் பேரிடர் அபாயங்களுக்கான உண்மையான முன்கூட்டிய நடவடிக்கைகளை அடிப்படையாகக் கொண்ட கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.









