இந்தோனேசியாவின் அனக் கிரகடோவா (Anak Krakatoa) எரிமலையிலிருந்து வெளியான சாம்பல் மேகங்கள் காரணமாக, இன்று திட்டமிடப்பட்டிருந்த கொழும்பு – ஜகார்த்தா மற்றும் ஜகார்த்தா – கொழும்பு விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அறிவித்துள்ளது.
இதன்படி, UL 364 (கொழும்பு – ஜகார்த்தா) மற்றும் UL 365 (ஜகார்த்தா – கொழும்பு) ஆகிய விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.
எரிமலைச் சாம்பல் மற்றும் சிலிக்கா கலந்த பாறைத் துகள்கள் பரவலாகப் பரவியுள்ளதால், விமானங்களின் இயந்திரங்கள் மற்றும் கட்டுப்பாட்டு அமைப்புகளுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் காணப்படுவதாக இந்தோனேசிய விமானப் போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக, ஜகார்த்தாவில் உள்ள சொகர்னோ–ஹட்டா சர்வதேச விமான நிலையம் உள்ளிட்ட பல விமான நிலையங்களில் விமானச் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.மேலும், இலங்கையை நோக்கிய மேற்கு விமானப் பாதையிலும் விமானங்கள் பறப்பதற்கு அதிகாரிகள் தடை விதித்துள்ளனர்.
இதனிடையே, பாதிக்கப்பட்ட வான்வெளியைத் தவிர்க்கும் வகையில், சிட்னி மற்றும் மெல்போர்னில் இருந்து நேற்று இரவு இலங்கை நோக்கிப் பயணித்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானங்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டிருந்தன.அவுஸ்திரேலியா மற்றும் இந்தோனேசியா இடையே சேவைகளை முன்னெடுக்கும் சில மத்திய கிழக்கு நாடுகளின் விமான நிறுவனங்களும் தமது விமானப் பாதைகளை மாற்றியமைத்துள்ளன.
எரிமலை வெடிப்பு காரணமாக இந்தோனேசியாவின் பல விமான நிலையங்களில் தற்காலிகமாக விமானச் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதுடன், பிராந்தியத்தின் சர்வதேச விமானப் போக்குவரத்திலும் பரவலான பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.









