பாரிய சமூகப் பேரழிவுக்கு காரணமாக அமைந்துள்ள போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கு மீனவ சமூகத்தினர் ஆதரவளிக்க வேண்டும் என பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை கோரிக்கை விடுத்துள்ளார்.
சில போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளுக்கு மீன்பிடிப் படகுகள் பயன்படுத்தப்படுவதாக சுட்டிக்காட்டிய அவர், இவ்வாறான சட்டவிரோத செயற்பாடுகளில் இருந்து மீனவ சமூகத்தினர் விலகியிருக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
பேருவளை, பண்டாரவத்தையில் அமைந்துள்ள புனித லாசர் ஆலயத்தில் இன்று (06) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.சிலரின் குறுகிய நோக்கங்களுக்காக முன்னெடுக்கப்படும் இவ்வாறான செயற்பாடுகள் சமூகத்தில் பாரிய சீரழிவை ஏற்படுத்துவதாகவும் பேராயர் குறிப்பிட்டார்.
குறிப்பாக, இளம் தலைமுறையினர் பெருமளவில் போதைப்பொருளுக்கு அடிமையாகி தமது எதிர்காலத்தையும் வாழ்க்கையையும் இழந்து வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
எனவே, நாட்டில் இருந்து போதைப்பொருள் அச்சுறுத்தலை முற்றாக ஒழிப்பதற்கு அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என வலியுறுத்திய பேராயர், இந்த முயற்சிக்கு மீனவ சமூகமும் தமது முழுமையான ஆதரவை வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.









