‘Clean Sri Lanka’ தேசியத் திட்டத்தின் வழிகாட்டலின் கீழ், அரசு மற்றும் தனியார் துறையின் பங்களிப்புடன் நாட்டின் 100 ரயில் நிலையங்களின் வசதிகளை மேம்படுத்தி நவீனமயமாக்கும் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.இதன் கீழ், பொலன்னறுவை மாவட்டத்தில் ஹிங்குரக்கொட ரயில் நிலையத்தை நவீனமயமாக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
பொலன்னறுவை மாவட்டத்தில் இந்தத் திட்டத்தின் கீழ் நவீனமயமாக்கப்படும் இரண்டாவது ரயில் நிலையமாக ஹிங்குரக்கொட ரயில் நிலையம் தெரிவுசெய்யப்பட்டுள்ளது. இதற்கான ‘கனவு இலக்கு’ திட்டம், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில் அண்மையில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.இதேவேளை, ‘கனவு இலக்கு’ திட்டத்தின் கீழ் நவீனமயமாக்கப்பட்ட கதுருவெல ரயில் நிலையம் ஏற்கனவே மக்கள் பயன்பாட்டுக்காக திறக்கப்பட்டுள்ளது.
கிழக்கு ரயில் பாதையில், கல்ஓயா மற்றும் பொலன்னறுவை ரயில் நிலையங்களுக்கு இடையில் அமைந்துள்ள ஹிங்குரக்கொட ரயில் நிலையம், குறைந்தபட்ச வசதிகளுடன் இயங்கி வருவதுடன், கடந்த 45 ஆண்டுகளாக குறிப்பிடத்தக்க அபிவிருத்திப் பணிகள் எதுவும் முன்னெடுக்கப்படாத நிலையமாகவும் காணப்படுகிறது.
பயணிகள் போக்குவரத்துக்கு மாத்திரமன்றி, பல்வேறு விவசாய உற்பத்திகளையும் பெருமளவில் கொண்டு செல்வதற்கு இந்த ரயில் நிலையம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.இந்நிலையில், சுமார் 40 மில்லியன் ரூபாய் செலவில் ஹிங்குரக்கொட ரயில் நிலையத்தை முழுமையாக நவீனமயமாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.









