கொழும்பு துறைமுக நகரில் (Port City) இயங்கி வரும் 68 நிறுவனங்களை “மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த இரண்டாம் நிலை வர்த்தக நிறுவனங்கள்” என வகைப்படுத்துவதற்கான விதிமுறைகளை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இந்த நிறுவனங்கள் தகவல் தொழில்நுட்பம், ஆலோசனைச் சேவைகள், வணிகச் செயற்பாடுகளின் வெளிப்பணியளிப்பு (BPO), தளவாடம், உட்கட்டமைப்பு, கலப்பு மற்றும் ஒருங்கிணைந்த வணிக மாதிரிகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இயங்கி வருகின்றன.2026 மார்ச் 30ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், 2021ஆம் ஆண்டின் 11ஆம் இலக்க கொழும்பு துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழுச் சட்டத்தின் கீழ் இந்த நிறுவனங்களை வகைப்படுத்துவதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, குறித்த 68 நிறுவனங்களையும் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த இரண்டாம் நிலை வர்த்தக நிறுவனங்களாக வகைப்படுத்துவதற்கான விதிமுறைகள் 2026 ஏப்ரல் 10ஆம் திகதியிட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட்டன.இந்நிலையில், ஜனாதிபதியும் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான அவர் முன்வைத்த யோசனைக்கு அமைய, குறித்த விதிமுறைகளை நாடாளுமன்றத்தின் அங்கீகாரத்திற்காக சமர்ப்பிக்க அமைச்சரவை தற்போது அனுமதி வழங்கியுள்ளது.









