இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம், நாளை (24) காலை 8.00 மணி முதல் நாடளாவிய ரீதியில் கடுமையான தொடர்ச்சியான தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடத் தீர்மானித்துள்ளது.
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய சுகாதார அலுவலகத்தில் இடம்பெறும் சட்டவிரோத செயல்களுக்கு எதிர்ப்பு தெரிவித்த பொதுச் சுகாதார பரிசோதகர் பி.எச். மிகஸ்தெனிய இடமாற்றம் செய்யப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக சங்கம் தெரிவித்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக அதிகாரிகளுக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்ட போதிலும், சுகாதார அமைச்சு இதுவரை உரிய தீர்வை வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் சங்கம் தெரிவித்துள்ளது.
இதன்படி, நாடு முழுவதிலும் உள்ள பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மற்றும் நிர்வாகப் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் நிர்வாகத்திற்கு வழங்கும் அனைத்து வகையான தரவுகள் மற்றும் அறிக்கைகளை சமர்ப்பிப்பதை முற்றாக இடைநிறுத்தவுள்ளனர்.
அத்துடன், அனைத்து தரவு அமைப்புகளையும் புதுப்பிக்கும் பணிகளும் இடைநிறுத்தப்படவுள்ளன. இந்தக் காலப்பகுதியில் சமர்ப்பிக்கப்படாத எந்தவொரு தரவும் பின்னர் தரவு அமைப்புகளில் புதுப்பிக்கப்படாது எனவும் சங்கம் தெரிவித்துள்ளது.
பி.எச். மிகஸ்தெனியவின் தன்னிச்சையான இடமாற்றத்தை உடனடியாக இரத்து செய்து, அது தொடர்பாக நியாயமான விசாரணை நடத்த வேண்டும் என சங்கம் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
மேலும், கொழும்பு துறைமுக சுகாதார அலுவலகம் மற்றும் கட்டுநாயக்க விமான நிலைய சுகாதார அலுவலகம் ஆகியவற்றில் பொதுச் சுகாதார பரிசோதகர்களுக்கான அங்கீகரிக்கப்பட்ட ஊழியர் எண்ணிக்கையைக் குறைப்பதற்கான முயற்சிகளுக்கும் தாம் கடும் எதிர்ப்பைத் தெரிவிப்பதாக இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் பதில் தலைவர் மற்றும் செயலாளர் தெரிவித்துள்ளனர்.
எவ்வாறாயினும், இந்த விடயங்கள் தொடர்பான நியாயமான விசாரணைக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கவும், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவும் தாம் தயாராக இருப்பதாக சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.









