அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேயின் கடுமையான இதய நோய் நிலைமையை கருத்தில் கொண்டு, அவரது தற்போதைய தடுப்புக் காவல் உத்தரவை நீடிக்க வேண்டாம் எனக் கோரி அவரது மனைவி மனோரி சலே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
ஓகஸ்ட் 20ஆம் திகதி அனுப்பப்பட்டுள்ள குறித்த கடிதத்தில், சுரேஷ் சலேயை இலங்கை தேசிய வைத்தியசாலையின் மருத்துவச் சூழலிலிருந்து வெளியேற்றி மீண்டும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) பொறுப்பில் ஒப்படைப்பது அவரது உயிருக்கு உடனடி மற்றும் தீவிரமான ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தொடர்ந்து தடுத்து வைக்கப்படுவதற்கும் சிறைவாசம் அனுபவிப்பதற்கும் எதிர்ப்புத் தெரிவித்து சுரேஷ் சலே உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்ததைத் தொடர்ந்து, கடந்த ஜூன் 7ஆம் திகதி மருத்துவச் சிகிச்சைக்காக இலங்கை தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாகவும், அதன்பின்னர் இதயவியல் பிரிவின் வைத்திய நிபுணர்களின் தொடர் கண்காணிப்பு மற்றும் சிகிச்சையின் கீழ் இருப்பதாகவும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதயச் செயற்பாடு தொடர்ந்து மோசமடைந்ததுடன் ஏற்பட்ட கடுமையான உடல்நலக் குறைபாடு காரணமாக, அவருக்கு இதயச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாகவும், இதன்போது இதயத் துடிப்பு சீராக்கி கருவி (Pacemaker) பொருத்தப்பட்டதாகவும் மனோரி சலே தெரிவித்துள்ளார்.
தற்போது தனது கணவர் மிகவும் ஆபத்தான உடல்நிலையில் இருப்பதாகவும், அவருக்கு தொடர்ச்சியான மற்றும் விசேட மருத்துவக் கண்காணிப்பும் சிகிச்சையும் அவசியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், தடுப்புக் காவல் உத்தரவை மேலும் நீடிப்பதுடன், தேசிய வைத்தியசாலையிலிருந்து அவரை வெளியேற்றி மீண்டும் CID பொறுப்பில் கொண்டு செல்லும் எந்தவொரு நடவடிக்கையும் அவரது உயிருக்கு கடுமையான ஆபத்தை ஏற்படுத்தும் எனவும் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, தற்போதைய தடுப்புக் காவல் உத்தரவு காலாவதியான பின்னர் அதனை மீண்டும் நீடிக்க வேண்டாம் என அவர் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
அத்துடன், எந்தவொரு சட்டபூர்வமான விசாரணைக்கும் தனது கணவரோ அல்லது குடும்பத்தினரோ தடையாக இருக்கவோ, விசாரணையைத் தாமதப்படுத்தவோ அல்லது தலையிடவோ விரும்பவில்லை எனவும், சட்டத்திற்கு அமைவாக முன்னெடுக்கப்படும் அனைத்து விசாரணைகளுக்கும் முழுமையான ஒத்துழைப்பை வழங்கத் தயாராக இருப்பதாகவும் மனோரி சலே தனது கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ளார்.









