இலங்கைக்குச் சொந்தமான கடற்பரப்பில் மீன் உற்பத்தி படிப்படியாகக் குறைந்து வருவதாக தேசிய நீர்வாழ் உயிரின வளங்கள் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிறுவனம் (நாரா) தெரிவித்துள்ளது.
இது இலங்கைக்கு மாத்திரம் ஏற்பட்டுள்ள பிரச்சினையல்ல எனவும், உலகின் பல நாடுகளின் கடல் சூழலியலிலும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் பொதுவான அச்சுறுத்தலாகும் எனவும் நாராவின் தலைவர் கலாநிதி சனத் ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
இந்த நிலைமை திடீரென ஏற்பட்டதல்ல எனக் குறிப்பிட்ட அவர், 2014ஆம் ஆண்டு முதல் இலங்கையைச் சூழவுள்ள கடற்பரப்பில் மீன் உற்பத்தி வீழ்ச்சியடைந்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.
மீன் உற்பத்தி குறைவதற்கு ஒரு குறிப்பிட்ட காரணியை மாத்திரம் பொறுப்பாக்க முடியாது எனவும், கடல் உயிரியல் கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள மாற்றங்களே இதற்கான பிரதான காரணமாக இருக்கலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, எல் நினோ (El Niño) நிலைமையின் தாக்கம் இதற்கு காரணமாக உள்ளதா என்பது இதுவரை உறுதியாக அடையாளம் காணப்படவில்லை எனவும், அதன் காரணமாக இலங்கைக்கு நேரடியாகப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் உறுதிப்படுத்தப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலைமை நீண்டகாலம் தொடருமானால், மீனவ மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில் அவர்களை மாற்றுத் தொழில்களில் ஈடுபடுத்துவதற்கான நடவடிக்கைகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக நாரா தலைவர் தெரிவித்துள்ளார்.
மீன் உற்பத்தியை அதிகரிப்பதற்கான விசேட மீன் வளர்ப்புத் திட்டமொன்று ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ள போதிலும், அதன் தற்போதைய முன்னேற்றம் திருப்தியளிக்கும் வகையில் இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, நாட்டில் நிலவும் மீன் வள நெருக்கமை தொடர்பில் கருத்து தெரிவித்த தேசிய மீனவக் கூட்டுறவு இயக்கத்தின் அழைப்பாளர் ஹர்மன் குமார, மீன்பிடியின் போது தடைசெய்யப்பட்ட வலைகள் மற்றும் அழிவை ஏற்படுத்தும் உபகரணங்களைப் பயன்படுத்துவதற்கு எதிரான சட்டங்கள் உரிய முறையில் நடைமுறைப்படுத்தப்படாமையே மீன் வளம் அழிவடைவதற்கான பிரதான காரணங்களில் ஒன்றாகும் எனக் குற்றஞ்சாட்டியுள்ளார்.









