இந்த வருடம் இதுவரையான காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் 93,381 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
டெங்கு நோயால் இதுவரை 71 பேர் உயிரிழந்துள்ளதுடன், இறப்பு விகிதம் 0.076 சதவீதமாகப் பதிவாகியுள்ளது.
ஓகஸ்ட் மாதத்தின் முதல் 20 நாட்களில் மட்டும் 8,043 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். ஜூலை மாதத்தில் 29,964 பேரும், ஜூன் மாதத்தில் 21,533 பேரும் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டிருந்தனர்.
மொத்த நோயாளர்களில் 52.94 சதவீதமானோர், அதாவது 49,440 பேர் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளனர். தென் மாகாணத்தில் 13,697 பேரும், மத்திய மாகாணத்தில் 8,441 பேரும் பதிவாகியுள்ளனர்.
மாவட்ட மட்டத்தில் கம்பஹாவில் அதிகபட்சமாக 19,888 நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், கொழும்பில் 18,535 பேரும் கண்டியில் 6,755 பேரும் பதிவாகியுள்ளனர்.
மேலும், மாத்தறை, களுத்துறை, காலி மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் முறையே 6,077, 6,040, 5,122 மற்றும் 4,979 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். கொழும்பு மாநகரசபை எல்லைக்குள் மட்டும் 3,760 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
நாடளாவிய ரீதியில் 76 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் தொடர்ந்தும் அதி-அபாய வலயங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
நுளம்புகள் பெருகக்கூடிய இடங்களை அகற்றி சுற்றுச்சூழலை சுத்தமாக வைத்திருக்குமாறும், காய்ச்சல் ஏற்பட்டால் தாமதிக்காமல் உரிய மருத்துவ சிகிச்சையைப் பெற்றுக்கொள்ளுமாறும் சுகாதார அதிகாரிகள் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளனர்.









