கொவிட்-19 தொற்றுநோய்க் காலத்தில் உயிரிழந்த முஸ்லிம்களின் ஜனாஸாக்கள், கோட்டாபய ராஜபக்ச அரசாங்கத்தினால் கட்டாயமாக எரிக்கப்பட்டமை தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி, திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் கடந்த ஆகஸ்ட் 8ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துப் நிறைவேற்றப்பட்ட பிரேரணையை, பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் உள்ளீர்த்து விரிவாக ஆராயுமாறு கோரி, 20க்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்ட கோரிக்கை கடிதம் இன்று (19.08.2026) சபாநாயகரிடம் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டது.
திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப், கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான், திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை மற்றும் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் அப்துல் வாசித் ஆகியோர் சபாநாயகரைச் சந்தித்து இக்கோரிக்கை கடிதத்தை கையளித்தனர்.
முன்னாள் அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில், சுகாதார வழிகாட்டுதல்களுக்கு முரணாகவும், முஸ்லிம் சமூகத்தின் மத நம்பிக்கைகளையும் உரிமைகளையும் புறக்கணிக்கும் வகையிலும் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் கட்டாய ஜனாஸா எரிப்பு தொடர்பில், மனித உரிமை மீறல்கள் மற்றும் அநீதிகள் குறித்து முறையான, சுயாதீனமான மற்றும் பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்பட வேண்டியதன் அவசியத்தை இக்கோரிக்கை வலியுறுத்துகிறது.
இந்த விவகாரம் தொடர்பில் உண்மை நிலை வெளிக்கொணரப்பட்டு, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீதி கிடைப்பதை உறுதிப்படுத்தும் வகையில் உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.








