வருடாந்த கண்டி எசல பெரஹரவை முன்னிட்டு, நாளை (18) முதல் விசேட போக்குவரத்து மற்றும் பாதுகாப்புத் திட்டத்தை அமுல்படுத்த இலங்கை பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
பெரஹர காலம் நிறைவடையும் வரை இந்த விசேட ஏற்பாடுகள் நடைமுறையில் இருக்கும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. வுட்லர் தெரிவித்துள்ளார்.
கும்பல் பெரஹர நாளை ஆரம்பமாகி ஒகஸ்ட் 22ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதுடன், ரந்தோலி பெரஹர ஒகஸ்ட் 23ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
விசேட திட்டத்தின் கீழ் போக்குவரத்து கட்டுப்பாடு, வீதி மறிப்பு கடமைகள், பாதுகாப்பு சோதனைகள், வாகனங்கள் மற்றும் பாதசாரிகளை சோதனை செய்தல், சுற்றுலாப் பயணிகளுக்கு வழிகாட்டுதல் மற்றும் வாகன நிறுத்துமிடங்களை நிர்வகித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
பெரஹர பாதுகாப்புப் பணிகளுக்காக 6,200 பொலிஸ் அதிகாரிகள், 564 விசேட அதிரடிப் படையினர், முப்படைகளைச் சேர்ந்த 1,200 பேர் மற்றும் சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தைச் சேர்ந்த 29 பேர் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
மேலும், பொலிஸ் மோப்ப நாய் பிரிவுகளும் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்படவுள்ளன.
தலதா பெரஹர காலத்தில் கண்டி நகருக்கான 14 நுழைவுப் புள்ளிகளிலும் வீதி மறிப்பு கடமைகள் மேற்கொள்ளப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்படவுள்ளது.
பெரஹரவை பார்வையிட வரும் மக்களுக்காக 13 வாகன நிறுத்துமிடங்கள் ஒதுக்கப்படவுள்ளன. அவற்றில் ஆறு நிறுத்துமிடங்கள் இலகு ரக வாகனங்களுக்கும், ஏழு நிறுத்துமிடங்கள் கனரக வாகனங்களுக்கும் ஒதுக்கப்படும்.
அத்துடன், பெரஹர காலத்தில் கண்டி நகருக்குள் பிரவேசிக்காமல் குறித்த பகுதி ஊடாக பயணிக்கும் வாகனங்களுக்காக மாற்றுப் பாதைகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.









