பாகிஸ்தான் பிரதமர் முஹம்மது ஷெஹ்பாஸ் ஷரீப், 2026 ஆகஸ்ட் 14ஆம் திகதி கொண்டாடப்படும் சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டிலும் வெளிநாடுகளிலும் வாழும் அனைத்து பாகிஸ்தானியர்களுக்கும் தனது இதயபூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
சுதந்திரப் போராட்டத்தை வழிநடத்திய நாட்டின் தந்தை குவாயித்-இ-ஆஸம் முஹம்மது அலி ஜின்னா, அல்லாமா முஹம்மது இக்பால் உள்ளிட்ட தலைவர்கள் மற்றும் பாகிஸ்தான் இயக்கத்தின் தலைவர்கள், செயற்பாட்டாளர்கள் மற்றும் முன்னோர்களுக்கு பிரதமர் தனது மரியாதையைச் செலுத்தியுள்ளார்.
நாட்டின் திறமையான இளைஞர்கள், தொழிலாளர்கள், தகுதிவாய்ந்த நிபுணர்கள், விவசாயிகள் மற்றும் கடின உழைப்பாளிகளே பாகிஸ்தானின் பிரகாசமான எதிர்காலத்திற்கான முக்கிய சக்திகள் என அவர் தெரிவித்துள்ளார்.
‘மர்கா-இ-ஹக்’ காலப்பகுதியில் பீல்ட் மார்ஷல் சையத் அசிம் முனீர் தலைமையிலான ஆயுதப் படைகள் வெளிப்படுத்திய ஒற்றுமை, துணிச்சல் மற்றும் உறுதியை பிரதமர் பாராட்டியுள்ளார்.
மேலும், பாகிஸ்தான், சவுதி அரேபியா மற்றும் துருக்கி இடையிலான மக்கா கூட்டு பாதுகாப்பு ஒப்பந்தம், பிராந்தியத்தில் பாகிஸ்தானின் வளர்ந்து வரும் மூலோபாய முக்கியத்துவத்தை வெளிப்படுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாலஸ்தீன மக்களுக்கும் ஜம்மு-காஷ்மீர் மக்களுக்கும் பாகிஸ்தான் தொடர்ந்து உறுதியான ஆதரவை வழங்கும் எனவும் பிரதமர் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.
நாட்டின் அபிவிருத்தி, செழிப்பு, அமைதி, ஸ்திரத்தன்மை, நல்லிணக்கம் மற்றும் தேசிய ஒற்றுமைக்காக அனைத்து பாகிஸ்தானியர்களும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் எனவும் சுதந்திர தினச் செய்தியில் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷரீப் அழைப்பு விடுத்துள்ளார்.
அப்ரா அன்சார்









