சர்வகால சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவராகக் கருதப்படும் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் புகழ்பெற்ற முன்னாள் சகலதுறை ஆட்டக்காரர் சர் கார்பீல்ட் சோபர்ஸ் (Sir Garfield Sobers) தனது 89 ஆவது வயதில் காலமானார்.
1954 முதல் 1974 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் 93 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள சோபர்ஸ், 8,032 ஓட்டங்களைக் குவித்துள்ளதுடன் 235 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.
ரசிகர்களை மகிழ்விக்கும் இடதுகை துடுப்பாட்டக்காரரான சோபர்ஸ், 1958 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ஆட்டமிழக்காமல் 365 ஓட்டங்களைப் பெற்றார்.
இந்த சாதனை 36 ஆண்டுகாலமாக தேர்வுப் போட்டிகளில் ஒரு வீரரின் அதிகபட்ச ஓட்ட எண்ணிக்கையாக நீடித்தது.
அதேநேரம் சுழற்பந்து மற்றும் வேகப்பந்து என இரண்டையும் வீசக்கூடிய மிகச்சிறந்த பன்முகத்தன்மை கொண்ட பந்துவீச்சாளராகவும் அவர் திகழ்ந்தார்.
நாட்டிங்ஹாம்ஷையர் (Nottinghamshire) அணிக்காக கவுண்டி கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடிய சோபர்ஸுக்கு, கிரிக்கெட் துறைக்கு அவர் ஆற்றிய சேவைகளுக்காக 1975 ஆம் ஆண்டு ‘நைட்ஹுட்’ (Knighted) பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
அத்துடன், விஸ்டன் (Wisden) அமைப்பினால் 20 ஆம் நூற்றாண்டின் சிறந்த ஐந்து கிரிக்கெட் வீரர்களில் ஒருவராகவும் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1968 ஆம் ஆண்டு நாட்டிங்ஹாம்ஷையர் அணிக்காக விளையாடிய போது, முதல்தர கிரிக்கெட் போட்டி ஒன்றில் ஒரு ஓவரின் 6 பந்துகளிலும் 6 சிக்ஸர்களை விளாசிய உலகின் முதல் வீரர் என்ற சாதனையை சோபர்ஸ் படைத்தார்.
“ஒரு சிறந்த இன்னிங்ஸ் முடிவுக்கு வந்துள்ளது. எங்களின் இதயங்களில், இப்போதும் எப்போதும் சர் கார்பீல்ட் சோபர்ஸ் வாழ்வார்” என மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.
நாட்டிங்ஹாம்ஷையர் கிளப், சோபர்ஸை “கிரிக்கெட் வரலாற்றின் மிகச்சிறந்த சகலதுறை ஆட்டக்காரர் மற்றும் நாட்டிங்ஹாம்ஷையர் வரலாற்றின் ஒரு சின்னம்” என விவரித்துள்ளது.
“சர் கார்பீல்ட் சோபர்ஸின் மறைவு குறித்து அறிந்தது எமக்கு மிகுந்த மனவருத்தத்தை அளிக்கிறது” என அக்குளாம் குறிப்பிட்டுள்ளது.









