யுத்தத்தினால் இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றும் வேலைத்திட்டத்தை விரைவுபடுத்துமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பணிப்புரை விடுத்துள்ளார்.
குறைந்த வருமானம் உடையவர்களின் பகுதியளவில் கட்டப்பட்ட வீடுகளுக்கு வீட்டுவசதி உதவி வழங்கும் வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துமாறும் ஜனாதிபதி அறிவுறுத்தினார்.
அரசாங்கத்தின் வீடமைப்பு அபிவிருத்தி வேலைத்திட்டமான “தமக்கென ஒரு இடம் – அழகான வாழ்க்கை” என்பதன் முன்னேற்றம் மற்றும் அடுத்த ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட நிதி ஒதுக்கீடு குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.
அதேநேரம் மக்களின் நீண்டகால குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை காண்பதற்காக, 2027ஆம் ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் விசேட கவனம் செலுத்துவதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.
வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர்வழங்கல் அமைச்சின் 2026ஆம் ஆண்டுக்கான திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வு மற்றும் 2027ஆம் ஆண்டுக்கான நிதித் தேவைகள் குறித்து 08.07.2026 முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை, தேசிய சமூக நீர் வழங்கல் திணைக்களம், தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை, வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர்வழங்கல் அமைச்சின் மீள்குடியேற்றப் பிரிவு உள்ளிட்ட அமைச்சின் விடயப்பரப்பிற்குட்பட்ட அனைத்து திணைக்களங்கள் மற்றும் நிறுவனங்களினால் 2026ஆம் ஆண்டு வரவுசெலவுத் திட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் செயல்படுத்தப்பட்ட திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் 2027ஆம் ஆண்டுக்கான திட்டங்கள் மற்றும் நிதித் தேவைகள் குறித்து இதன் போது தனித்தனியாக கலந்துரையாடப்பட்டது.
வெவ்வேறு அமைச்சுகளின் கீழ் ஒரே விடயப்பரப்புடன் தொடர்புடைய பல நிறுவனங்கள் காணப்படுவதன் காரணமாக, திட்டங்களைச் செயல்படுத்துவதில் செயற்திறனின்மை ஏற்பட்டுள்ளதாகவும், அதேபோன்று பல வருடங்களுக்கு முன்னர் வெவ்வேறு நோக்கங்கள் மற்றும் தேவைகளுக்காக நிறுவப்பட்ட நிறுவனங்களை மேலும் பராமரித்துச் செல்வதன் மூலம் அரசாங்கத்திற்கு மேலதிக நிதிச் சுமையை சுமக்க வேண்டியேற்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.









