மு.கா.தலைவர் ஹக்கீம் வாழ்த்து
(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
தென்னிந்தியாவின், கேரளா மாநிலத்தில் ஐக்கிய ஜனநாயக முன்னணி அரசு பதவி ஏற்றுக் கொண்ட நிலையில், அந்த மாநில முதலமைச்சராக காங்கிரஸ் மூத்த தலைவர் வீ. டி .சதீசன் தலைமையிலான அமைச்சரவையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் சட்டசபை உறுப்பினர்கள் ஐவர் இடம்பெறுவது குறித்து, இலங்கையில் அதன் நேசக் கட்சியான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
இது சம்பந்தமான இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் கேரள மாநிலத் தலைவர் பானக்காடு சையது சாதிக் அலி ஷிஹாப் தங்கள் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய பொதுச்செயலாளர் பி .கே .குஞ்ஞாலிக் குட்டி ஆகியோருக்கு அவர் கடிதங்களை எழுதியுள்ளார்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் முனீருல் மில்லத் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் வழி காட்டலில் தமிழகத்தில் ஏணி சின்னத்தில் இரண்டு இடங்களை வென்றுள்ள அக் கட்சி , கேரள மாநிலத்திலும் தேசிய தலைவரின் வழிகாட்டலில் ஏணி சின்னத்தில் 22 இடங்களை வென்றிருப்பது அரும்பெரும் சாதனை என முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் குறிப்பிட்டுள்ளார்.
கேரளா மாநில அரசாங்கத்தில் 20 பேர் கொண்ட அமைச்சரவையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கில் வெற்றி பெற்ற பி.கே .குஞ்ஞாலிக் குட்டி, வழக்கறிஞர் எம். சம்சுதீன், கே.எம். ஷாஜி, பி.கே. பஷீர், பி.இ. அப்துல் கபூர் ஆகியோர் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சிக்குரியது எனவும் அவர் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சட்ட சபை உறுப்பினர் ஒருவரையும் இணைத்துக் கொள்ள கட்சியின் தேசியத் தலைவர் பேராசிரியர் காதர் மொகிதீன் அவர்களிடம் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கதென மு.கா. தலைவர் ஹக்கீம் சுட்டிக்காட்டியுள்ளார்.









