பேஸா வீசா எனும் ஃபிறீ மூமன்ட் பாஸ் என்பது ஹஜ் பயண ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கு பிரத்தியேகமாக சவூதி ஹஜ் அமைச்சினால் ஒவ்வொரு நாட்டுக்கும் வழங்கப்படும் வீசாவாகும்.
ஒரு நாட்டுக்கு கிடைக்கும் ஹஜ் கோட்டாவுக்கு மேலதிகமாக இவை வழங்கப்படுகிறது. 2019 வரையான காலப்பகுதிக்கு முன்னர் 150-110 வரையான இவ்வகை வீசாக்கள் வழங்கப்பட்டு வந்தது எனினும் 2023 ஆம் தொடக்கம் இலங்கைக்கான பேஸா வீசாக்கள் 35 ஆக மட்டுப்படுத்தப்பட்டது.
ஏனெனில் 2019 இற்கு முன் 45 முனஸ்ஸம் ( ஹஜ்ஜுக்காக சவூதி செல்ல நியமிக்கப்படும் ஆக குறைந்த எண்ணிக்கை குழு) குழுக்கள் நியமிக்கப்பட முடியுமான நிலையில் கிட்டத்தட்ட அதன் 3 மடங்கு எண்ணிக்கையை பேஸா வீசாவாக சவூதி அரசு வழங்கினர். அது 2024 இல் 25 முனஸ்ஸம்களாக மட்டுப்படுத்தப்பட்ட போது பேஸா வீசா 35 ஆக குறைக்கப்பட்டது.
மேலும் அது கடந்த வருடம் 6 முனஸ்ஸமாக இருந்த போதும் அதே 35 பேஸா வீசாக்கள் வழங்கப்பட்டு இவ்வருடமும் அதே எண்ணிக்கையே வழங்கப்பட்டது.
பல முகவர்கள் இணைந்து ஒரு முனஸ்ஸம் குழுவை உருவாக்குவதால் அக்குழுவில் உள்ளடங்கும் முகவர்களும் ஹஜ் ஏற்பாட்டு வேலைகளை பகிர்ந்து நிறைவேற்ற வேண்டிய நிலை காணப்படும். அதனால் அவர்களையும் அந்த வீசாவில் உள்ளடக்குவதற்காகவே அந்த வீசாக்கள் முனஸ்ஸம்களின் எண்ணிக்கையை விட அதிகரித்து வழங்கப்படும் வழமை இன்று வரை சவூதி அரசினால் பின்பற்றப்படுகிறது.
அன்றைய காலந்தொட்டு பல அமைச்சர்களாலும் பணிப்பாளர்களாலும் இந்த பேசா வீசா உரித்து என்பது விவாதிக்கப்பட்டு வந்தது. இந்த பேஸா வீசாக்கள் ஹஜ் ஏற்பாடுகளை மேற்கொள்ளும் முகவர்களுக்கு மட்டுமானதல்ல எனவும் ஹஜ் பயணத்தின் போது முகவர்களால் முன்னெடுக்கப்படும் ஏற்பாடுகளையும் சேவைகளையும் ஒழுங்குபடுத்துவதற்காக ஹஜ் குழு திணைக்களம் அமைச்சர்கள் பங்குகொள்ள வேண்டும் என்றும் நியாயம் கற்பிக்கப்பட்டு ஹஜ்ஜுக்கு பொறுப்பாக இருந்த இதுவரைகால அமைச்சர்கள் தமக்கு விரும்பியவாறு இந்த வீசாக்களை பங்கு வைப்பது வழமையாக இருந்தது. இருப்பினும் முகவர்கள் அனைவருக்கும் ஆக குறைந்தது தலா ஒரு வீஸா உறுதி செய்யப்பட்டே வந்தது.
ஆனாலும் சில முகவர்கள் தமது அமைச்சருடனான நெருக்கத்தை பாவித்து மேலதிக வீசாக்களை எடுத்தும் வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தங்களது குடும்பங்களையும் தங்களது அரசியல் அபிமானிகளுக்கும் இந்த வீசாக்களை அமைச்சர்கள் வழங்கி ஹஜ்ஜுக்கு அழைத்து சென்றிருந்தனர். சில அமைச்சர்கள் ஒரு படி மேல் சென்று அந்த ஹஜ் பயணத்துக்கு தேவைப்படும் மேலதிக செலவீனத்தையும் ஏன் செலவு பணத்தையும் ஹஜ் நிதியில் இருந்து உபயோகித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பேஸாவுக்கு 35,000 ரூபாய்க்கு உட்பட்ட சிறு தொகையை செயலாக்க கட்டணமாக செலுத்தினால் போதும் வேறு எந்த செலவும் இல்லை என்ற நியதியே சென்ற வருடம் வரை காணப்பட்டது. சில முகவர்கள் அவ்வாறு அரசியல் அணுசரனையில் வருவோருக்கு ஆராத்தி மட்டுமில்லா குறையோடு மற்ற எல்லா சேவைகளையும் இலவசமாக வழங்குவர் . அது அவர்களின் அடுத்த வருட ஹஜ் கோட்டாவுக்கான முதலீடு.
இந்த வகை வீசாக்களுக்கு தனியாக சவூதி அரசு மினா கூடாரத்தை அமைத்திருந்தாலும் அவர்கள்அங்கு தங்காது இலங்கை ஹஜ்ஜாஜிகளால் மினாவில் கொள்வனவு செய்யப்படும் கூடார வலயத்திலே இவ்வகை பேஸா வீசா பெறுநர்கள் தாம் தங்குவதற்கு தனி கூடாரத்தை சவூதி முஅல்லிம்களிடம் கேட்டு பெறுவதுண்டு. கடந்த காலங்களில் மினாவில் இடம்பெற்ற இடப்பற்றாக்குறைக்கு இதுவும் ஒரு காரணம் எனலாம்.
2025 இல் புதிதாக நியமிக்கப்பட்ட ஹஜ் குழு இந்த 35 பேஸா வீசாக்களும் முகவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என்று 2025 ஹஜ் ஊடக சந்திப்பில் குறிப்பிட்டிருந்தார்.
ஆனால் 6 முனஸ்ஸம்களுக்கு தலா 2 பேஸா வீதம் மொத்தம் 12 ஐ ஒதுக்கிவிட்டு மீதம் 23 இல் 11 அமைச்சரின் பரிந்துரைகளுக்கு அமைவாக வழங்கப்பட்டது என்ற குற்றச்சாட்டு உள்ளது.
அந்த நிலையில் கடந்த நவம்பர் 5 ஆம் திகதி 2026 ஆம் ஆண்டுக்கான ஊடக சந்திப்பை நடாத்திய ஹஜ் குழு அந்த குற்றச்சாட்டை உறுதிப்படுத்தி இந்த வருடம் கண்டிப்பாக 35 பேஸா வீசாக்களும் முகவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும்என்று கூறி அது ஹஜ் ஏற்பாடுகள் செய்யும் முகவர்களுக்கானது என்றும் வலியுறுத்தி இருந்தார்.
அவ்வாறு கூறிய அவரே தற்போது தனது மனைவியை பேஸா வீசாவில் ஹஜ்ஜுக்கு அழைத்து செல்கிறார் என்பது பெரும் முரண்பாட்டை தோற்றுவித்துள்ளது.
போதாக்குறைக்கு ஹஜ் குழு உறுப்பினரான கலாநிதி அஸ்லம் அவர்களும் தனது பாரியாரை இந்த வீசாவில் அழைத்துச் செல்கிறார். இவற்றுக்கான அனுமதியை அமைச்சரிடம் பெற்றிருப்பதாகவும் அறிய கிடைக்கிறது.
இந்த பேசா விசாவில் தமது பாரியார்களை அழைத்துச் செல்வதற்காக ஹஜ் குழு உறுப்பினர்கள் சிலரால் முன்வைக்கப்பட்ட நியாயம் என்னவெனில், ஹஜ் குழுவின் குடும்ப உறுப்பினர்கள் ஒரு முகவரூடாக ஹஜ் செல்லும் போது அந்த குழு உறுப்பினர்கள் அந்த முகவர் நிலையத்தை சார்ந்தவர்கள் என முத்திரை குத்தப்படலாம் என்றும் ஹஜ் சேவைக்குரிய கட்டணத்தை எங்களது சொந்தப் பணத்தில் செலுத்தியே செல்கிறோம் மாறாக இலவசமாக அல்ல என்றும் நியாயம் கூறியதாகவும் அறியப்படுகிறது.
அப்படி என்றால் கடந்த வருடம் திணைக்கள பணிப்பாளர் தமது பாரியாரை அழைத்துச் செல்லும் போது ஏன் இந்த விசாவை ஹஜ் குழு வழங்கவில்லை? என்ற நியாயமான கேள்வி எழுகிறது.
அதேவேளை கடந்த சில நாட்களுக்கு முன் ஒரு முகவரால் ஏற்பாடு செய்யப்பட்ட புது காரியாலய திறப்பு விழாவுக்கு ஹஜ் குழு தலைவர் அதிதியாக சென்றதாகவும் அங்கு அடுத்த வருட ஹஜ் ஏற்பாடுகள் பற்றி அளவளாவியதாகவும் கிடைக்கப்பெறும் செய்தி உண்மையென்றால் அந்த செயற்பாடு அந்த முகவருக்கு ஹஜ் குழு தலைவர் சோரம் போனதாக அமையாதா?
மேலும் ஹஜ் பயணத்தின் போது தங்குமிட உணவு போக்குவரத்து, ஷொப்பிங் போன்றவற்றுக்கு முகவர்களால் வழங்கப்படும் அணுசரனைகளை என்னெவன்பது எனவும் அதிருப்திகள் எழுவதை தவிர்க்க முடியாது.
எல்லாவற்றிற்கும் மேலாக இந்த பேசா வீசாவுக்கு ஒரு போதும் இல்லாதவாறு மினா கூடாரத்துக்கும் சவூதி சேவை வழங்குநருக்கும் ஹஜ்ஜுடைய குர்பானுக்குமாக சுமார் 8 இலட்சம் மட்டுமே அவர்களால் செலுத்தப்பட்டது என அறிய முடிகிறது . அவர்களது விமான கட்டணம் 4 இலட்சம் என வைத்துக்கொண்டாலும் இலங்கை ஹஜ் கோட்டாவில் ஹஜ் செல்லும் ஒரு இலங்கை பிரஜை, 12 இலட்சத்துக்கு ஹஜ்ஜுக்கு போக முடியுமா? முடியும்; ஹஜ் குழு உறுப்பினர்களின் குடும்பங்களுக்கு முடியும் என்று அதிருப்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.
உண்மையில் ஹஜ் குழுவால் இந்த வருடம் தெரிவு செய்யப்பட்ட சவூதி வழங்குநர் நிறுவனம் பேசா வீசாவுக்கான பிரத்தியேக மினா கூடாரத்தை அமைக்க ஒருபோதும் இல்லாதவாறு பணம் செலுத்த நிர்ப்பந்தித்து உள்ளனர்.அது சாதாரணமாக ஹஜ் செல்லும் நபர்களுக்கு செலவாகும் செலவீனத்தின் அரைவாசி என்று கூறப்படுகிறது.
எல்லாவற்றிற்கும் மேலாக ஹஜ் ஏற்பாட்டாளர்களுக்கான இந்த பேசா வீசாக்களை பெறுபவர்கள் கடந்த நவம்பர் மாதத்தில் சவூதியில் இடம்பெற்ற கட்டாய பயிற்சி நிகழ்ச்சி திட்டத்தில் பங்கெடுத்த வராக இருக்க வேண்டும் என்று ஹஜ் குழு தலைவர் குறிப்பிட்டிருந்தாரே , இவர்களது மனைவியர்கள் எப்போது சவூதி சென்றனர் எப்போது பங்குபற்றினர் என கேள்வி கணைகளை தொடுத்து ஹஜ்குழு உறுப்பினர்களது அமானிதத்தின் மீதும் பொறுப்புகூறல் மீதும் மக்கள் அதிருப்தி கொள்ளும் போது ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகமே வெட்கி தலைகுனிய வேண்டியுள்ளது.
ஆக, இந்த இரு பாரியார்களளை விடுத்து ஒரு முனஸ்ஸமுக்கு தலா 3 வீதம் மொத்தம் 18 மட்டுமே இந்த வருடம் முகவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
பிரதி அமைச்சர் முனீர் முளஃப்பர் , ஊடக செயலாளர், கோவிட் ஜனாஸா அடக்க தன்னார்வலர் ஆகியோருக்கு தலா ஒருபேஸா என 3 பயன்படுத்தப்பட்டுள்ளது.
ஹஜ் குழு உறுப்பினர்கள் நால்வர் திணைக்கள உத்தியோகத்தர்கள் ஏழு பேர் மற்றும் ஒரு வைத்தியர் அடங்கலான வைத்திய/நிர்வாக குழுவுக்கும் இந்த வீசாக்கள் பங்கிடப்பட்டுள்ளன.
முகவர்களுக்கு மேலதிகமாக இந்த வீசாக்கள் வழங்கப்படுவதாயின் வைத்திய மற்றும் நிர்வாக வேலைகள் நிமித்தம் நியமிக்கப்படும் குழுவுக்கே வழங்கப்பட வேண்டும் என்பது நியாயமாகினும், அவ்வாறு செல்லும் மெடிகல் அட்மினிஸ்டரேஷன் மிஷன்கள் இலங்கையின் முதற் தொகுதி ஹஜ் குழு பயணப்படும் தினத்துக்கு 2-3 நாட்களுக்கு முன் சவூதி சென்று இறுதி தொகுதி ஹாஜிகள் நாடு திரும்பும் போதே வர வேண்டும் என்ற பிரதி இதுவரை காலமும் பின்பற்றப்படவில்லை என்பதே நிதர்சனம். ஆக இவ்வகை வீசாக்கள் செல்வாக்குமிக்கவர்களின் அகங்காரத்துக்கான தீனியே தவிர வேறில்லை. அடிபணிந்து விட்டேன் என்ற தல்பியா ஒன்று தான் இவர்களுக்கு குறை.










