மேற்கு வங்கத்தில், ஆளும் திரிணமுல் காங்கிரசை வீழ்த்தி ஆட்சி அதிகாரத்தை பா.ஜ.க முதன்முறையாக கைப்பற்றி உள்ளது. முதல்வர் மம்தா பானர்ஜியின், 15 ஆண்டு கால ஆட்சிக்கு முடிவுரை எழுதி, அக்கட்சி மாபெரும் சாதனை படைத்துள்ளது.
மேற்கு வங்கத்தில் மொத்தமுள்ள, 294 சட்டசபை தொகுதிகளுக்கு கடந்த 23 மற்றும் 29ல் இரு கட்டங்களாக தேர்தல் நடந்தது. முறைகேடு நடந்ததாக எழுந்த முறைப்பாட்டின் படி, தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தின் பால்டா தொகுதியில் மட்டும், எதிர்வரும் 21ல் மீண்டும் வாக்குப்பதிவு நடக்கிறது.
இந்த தேர்தலில் ஆளும் திரிணமுல் காங்., – எதிர்க்கட்சியான பா.ஜ.க இடையே பலத்த போட்டி நிலவியது.
இந்நிலையில், சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. தொடக்கத்தில் இருந்தே பா.ஜ.க அதிக தொகுதிகளில் முன்னிலை பெற்றது. ஆளுங்கட்சியான திரிணமுல் காங்கிரஸ், கடும் பின்னடைவை சந்தித்தது. ஆட்சி அமைக்க பெரும்பான்மைக்கு, 148 இடங்கள் தேவை என்ற நிலையில், 200க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை பெற்று பா.ஜ.க மாபெரும் சாதனை படைத்துள்ளது.
ஆளும் திரிணமுல் காங்., 90 இடங்களுக்கும் குறைவான இடங்களிலேயே முன்னிலை பெற்று கடும் பின்னடைவை சந்தித்துள்ளது.
கடந்த 2021 சட்டசபை தேர்தலில், 38 சதவீதமாக இருந்த பா.ஜ.கவின் வாக்கு வங்கி தற்போது, 45 சதவீதமாக அதிகரித்துள்ளது. அதே சமயம், 48 சதவீதமாக இருந்த திரிணமுல் காங்கிரசின் ஓட்டு வங்கி, 40.94 சதவீதமாக குறைந்துள்ளது.
தேர்தல் முடிவுகள் குறித்து முதல்வர் மம்தா பானர்ஜி கூறுகையில், ”வாக்கு எண்ணிக்கையில் சதி நடக்கிறது. நாங்கள் முன்னிலை பெற்றுள்ள பல தொகுதிகளின் தரவுகள் வெளியிடப்படவில்லை.
தொடக்கத்தில் பா.ஜ.க முன்னிலை பெறுவது போல ஒரு மாயையை உருவாக்க திட்டமிட்டு உள்ளனர். பல தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை இன்னும் முடியவில்லை. எனவே, இறுதி முடிவுகள் மாறும், என்றார்.
மம்தா பானர்ஜி எத்தனை குற்றச்சாட்டுகளை சுமத்தினாலும், மேற்கு வங்கத்தில் பா.ஜ., ஆட்சி அமைக்கப் போவது உறுதியாகி விட்டது. அக்கட்சி ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவது இதுவே முதன்முறை. 2011 முதல், 15 ஆண்டுகளாக மேற்கு வங்கத்தை ஆளும் முதல்வர் மம்தா பானர்ஜியின் ஆட்சிக்கு பா.ஜ.க முடிவுரை எழுதி உள்ளது.










