இஸ்மதுல் றஹுமான்
110 கோடி ரூபாவுக்கும் அதிகமான மதிப்புள்ள 'குஷ்' மற்றும் 'ஹாஷ்' போதைப்பொருட்களை தாய்லாந்திலிருந்து எடுத்து வந்து 22 இலங்கை பௌத்த பிக்குகளை கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவிற்கு கிடைத்த உளவுத் தகவலின் அடிப்படையில்லேயே இவர்கள் கைது செய்யப்பட்டனர்.
கைப்பற்றப்பட்ட இந்த போதைப் பொருட்களானது கட்டுநாயக்க விமான நிலையத்தில் இதுவரை கைப்பற்றப்பட்டவற்றிலேயே மிகப்பெரிய அளவானதுடன் போதைப்பொருளுடன் பௌத்த பிக்குகள் குழு ஒன்று கைது செய்யப்பட்டதும் இதுவே முதல் முறையாகும்.
ஒரு அநுசரனையாளர் வழங்கிய விமான டிக்கெட்டுகளைப் பயன்படுத்தி இந்தக் குழுவினர் கடந்த 22 ஆம் திகதி இலங்கையிலிருந்து தாய்லாந்திற்குச் சென்றுள்ளனர். அங்கு அவர்கள் பாமரர்களைப் போல் வேடமிட்டு பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்ததை அவர்களது கையடக்க தொலைபேசிகளை பரிசோதித்து போது ஆதில் பதிவு செய்யப்பட்டிருந்த புகைப்படங்கள், காணொளிகள் மூலம் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் கண்டறியப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அவர்கள் தாய்லாந்தின் பெங்கொக் நகரிலிருந்து தாய் எயார் ஏசியா விமான சேவையின் எம் டீ -140 இலக்க விமான மூலம் நேற்று முன் தினம் (25) இரவு 10.10 மணிக்கு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தடைந்தனர்.
கைது செய்யப்பட்ட இந்தத் துறவிகள் இலங்கையில் பல்வேறு பகுதிகளில் வசித்துவருவதுடன் பலதரப்பட்ட நிறுவனங்களில் உயர்கல்வியைத் தொடரும் இளம் துறவிகள் எனவும் தெரியவந்துள்ளன.
அவர்கள் கொண்டுவந்த பயணப் பொதிகளை பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் சோதனையிட்ட போது பாடசாலை உபகரணங்கள் மற்றும் பலவிதமான இனிப்புப் பட்டங்களுடன் வைத்து பயணப் பொதிகளின் கீழ் பகுதிகளில் சூசகமாக மறைத்து வைத்திருந்தமை கண்டுபிடிக்கப்பட்டன. அவற்றில் 110 கிலோகிராமுக்கும் அதிகமான 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' போதைப்பொருட்களை இருந்துள்ளன.
ஒவ்வொரு துறவியின் பயணப் பைகளிலும் 5 கிலோ கிராமுக்கும் அதிகமான எடை கொண்ட இந்த போதைப்பொருட்கள்,
மறைத்து வைக்கப்பட்டிருந்தாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விவகாரம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதற்காக கைது செய்யப்பட்ட துறவிகளை நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.










