நோர்வே நாட்டிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையிலான இலங்கைத் தூதுக்குழுவினர், நோர்வேயின் வர்த்தகம், கைத்தொழில் மற்றும்
கடற்றொழில் அமைச்சின் உயர் அதிகாரிகளுடன் 23.04.2026 ஒஸ்லோ நகரில் விசேட
கலந்துரையாடல்களை நடத்தினர். இலங்கையின் கடற்றொழில் துறையை
நவீனமயப்படுத்துவது மற்றும் தொழில்நுட்ப அறிவைப்
பகிர்ந்து கொள்வது குறித்து அமைச்சர் இதன்போது விசேட கவனம் செலுத்தினார்.
‘புளு ஜஸ்டிஸ்’ (Blue Justice) திட்டத்தின் தலைவர் குன்னார் ஸ்டோல்ஸ்விக் (Gunnar
Stølsvik) உடனான சந்திப்பின் போது, இலங்கையின் மீன்பிடிக் கலன்களைக்
கண்காணிப்பதற்கும், சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை
முறியடிப்பதற்கும் நார்வே அரசாங்கத்தினால் ஏற்கனவே வழங்கப்பட்டு வரும் உயர் மட்ட
செயற்கைக்கோள் தொழில்நுட்பத் தரவுகளை (AIS Data) தொடர்ச்சியாகவும்
இலவசமாகவும் வழங்குவதற்கு உடன்பாடு எட்டப்பட்டது. இந்தத்
தொழில்நுட்பத்தை மிகவும் வினைத்திறனான முறையில் பயன்படுத்துவதற்காக
கடற்றொழில் அமைச்சு மற்றும் திணைக்களத்தின் அதிகாரிகளுக்கு விசேட
பயிற்சித் திட்டங்களைத் தொடர்ச்சியாக வழங்குவதற்கும் நோர்வே தரப்பு இதன்போது சம்மதம் தெரிவித்தது.
அதனைத் தொடர்ந்து, நிலையான உணவுப் பாதுகாப்பு தொடர்பான உலகளாவிய செயல்பாட்டு
வலையமைப்பின் (Global Action Network) தலைவி அனிதா உத்தெய்ம் ஐவர்சன்
(Anita Utheim Iversen) உடனான கலந்துரையாடலில், மீன் உற்பத்திகளின் ஊட்டச்சத்து
பெறுமதி மற்றும் தரத்தை மேம்படுத்துவது குறித்து ஆராயப்பட்டது. உலகத்தரம்
வாய்ந்த “உணவு ஊட்டச்சத்து மற்றும் கலவை தொடர்பான குழுவில்” (Food Nutrition
and Composition Group) இணைந்துகொள்ளுமாறு இலங்கைக்கு இதன்போது உத்தியோகபூர்வ
அழைப்பு விடுக்கப்பட்டது. இதன் மூலம் நாரா (NARA) போன்ற ஆராய்ச்சி
நிறுவனங்களுக்கு சர்வதேச அறிவு மற்றும் தொழில்நுட்பங்களைப் பகிர்ந்து
கொள்வதற்கான விசேட வாய்ப்பு கிட்டும்.
இங்கு கருத்து வெளியிட்ட அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், நார்வே
அரசாங்கத்திற்கும் இலங்கை கடற்றொழில்
அமைச்சிற்கும் இடையிலான இந்த நெருக்கமான தொழில்நுட்ப
ஒத்துழைப்பின் ஊடாக, நாட்டின் கடற்றொழில் துறையை நவீன தொழில்நுட்பத்துடன்
வலுப்படுத்தவும், சர்வதேச தரத்திற்கு ஏற்ப இத்துறைசார் விடயங்களைப்
புதுப்பிக்கவும் அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளதாக
வலியுறுத்தினார்.
இந்நிகழ்வில் அமைச்சின் செயலாளர் கலாநிதி பி.கே. கோலித கமல் ஜினதாச மற்றும்
கடற்றொழில் பணிப்பாளர் நாயகம் எஸ்.ஜே. கஹவத்த ஆகியோரும்
கலந்துகொண்டனர்.









