துருக்கியின் அங்காராவில் ஏப்ரல் 20 முதல் 24 வரை நடைபெறவுள்ள ‘இலங்கை புதிய தலைமுறை ஊடகவியல் பயிற்சித் திட்டத்தில்’ (Sri Lankan New Generation Journalism Training Program) பங்கேற்பதற்காக, ஶ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் (SLMMF) 10 உறுப்பினர்களைக் கொண்ட ஊடகவியலாளர் குழு இன்று அதிகாலை துருக்கி நோக்கிப் புறப்பட்டது.
துருக்கிய ஒத்துழைப்பு மற்றும் ஒருங்கிணைப்பு முகவர் நிலையத்தின் (TİKA) அனுசரணையில், TRT World நிறுவனம் இந்தப் பயிற்சித் திட்டத்தை நடைமுறைப்படுத்துகிறது.
வேகமாக மாறிவரும் ஊடகத்துறையின் புதிய போக்குகள் மற்றும் சவால்களுக்கு ஏற்ப, இலங்கை ஊடகவியலாளர்களின் தொழில்முறைத் திறன்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இந்த முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஶ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் ஸ்தாபகப் போஷகர் என்.எம். அமீன் மற்றும் தலைவர் எம்.பி.எம். பைறூஸ் ஆகியோரின் வேண்டுகோளுக்கிணங்க இந்த வாய்ப்பு பெற்றுக்கொடுக்கப்பட்டது.
இலங்கையிலுள்ள துருக்கியத் தூதுவர் Semih Lütfü Turgut இதற்கான ஏற்பாடுகளை முன்னெடுத்திருந்தார்.
இக் குழுவினர் புறப்படுவதற்கு முன்னதாக, அவர்களைச் சந்தித்த தூதுவர், இந்தப் பயிற்சி நெறி ஆக்கபூர்வமானதாகவும் வெற்றிகரமானதாகவும் அமையத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
இப்பயிற்சித் திட்டம் குறித்து கருத்து வெளியிட்ட போரத்தின் தலைவர் எம்.பி.எம். பைறூஸ், “போரத்தின் உறுப்பினர்களுக்கிடையே பகிரங்க விண்ணப்பங்கள் கோரப்பட்டு, நிர்ணயிக்கப்பட்ட தகுதிகளின் அடிப்படையிலேயே இந்தப் பிரதிநிதிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இந்த வாய்ப்பை ஏற்படுத்தித் தந்த இலங்கைக்கான துருக்கித் தூதுவர் அவர்களுக்கும், இதற்கான முழுமையான ஒத்துழைப்பை வழங்கிய TİKA நிறுவனத்திற்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
சமகால ஊடகத்துறையின் சவால்களையும் மாற்றங்களையும் எதிர்கொள்ளும் வகையில், தனது உறுப்பினர்களுக்கு சர்வதேச ரீதியிலான அனுபவங்களையும் பயிற்சிகளையும் பெற்றுக்கொடுக்க ஶ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம் தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயற்படும்” என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.









