மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழலினால் நாட்டின் பொருளாதாரத்திற்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளைத் தணித்து, அத்தியாவசிய பொதுச் சேவைகளைப் பேணுவதை உறுதிப்படுத்துவதற்கும், தற்போதைய அரச நிதி மற்றும் அனுமதிக்கப்பட்ட அரச செலவு எல்லைகளுக்குள் செலவினங்களை முகாமைத்துவம் செய்வதற்கும் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெருமவினால் இந்தச் சுற்றறிக்கை அனைத்து அமைச்சுகளின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள், விசேட செலவின அலகுகள் மற்றும் ஆணைக்குழுக்களின் தலைவர்கள், திணைக்களத் தலைவர்கள், மாவட்ட செயலாளர்கள் மற்றும் அரச கூட்டுத்தாபனங்கள்/சட்டரீதியான சபைகளின் தலைவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளமை மற்றும் புதன்கிழமை அரச அலுவலகங்களுக்கு விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளமையை கருத்திற் கொண்டு, அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், அரச அதிகாரிகள் மற்றும் ஏனைய தரப்பினருக்கு வழங்கப்பட்டுள்ள எரிபொருள் கொடுப்பனவை, மீண்டும் அறிவிக்கும் வரை கடந்த மார்ச் 01 ஆம் திகதி நிலவிய எரிபொருள் விலையின் அடிப்படையில் வழங்க அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், எரிபொருள் கொடுப்பனவுக்குப் பதிலாக எரிபொருள் அளவு மற்றும் அதன் விலையை அடிப்படையாகக் கொண்டு செலுத்தப்படும் ஏனைய கொடுப்பனவுகளையும் கடந்த மார்ச் 01 ஆம் திகதி நிலவிய எரிபொருள் விலைக்கு அமையவே கணக்கிட வேண்டும் என நிதி அமைச்சின் செயலாளர் குறித்த சுற்றறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.










