கெரவலபிட்டி கைத்தொழில் வலயத்தின் ஊடாக அமைந்துள்ள, கெரவலபிட்டிய அதிவேக நெடுஞ்சாலை நுழைவாயிலிலிருந்து எலகந்த வீதி வரையிலான சுமார் 2.2 கிலோமீற்றர் நீளமான வீதிப் பகுதியை மீள் அபிவிருத்தி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இலங்கை காணி அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தால் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ள 400 ஏக்கர் காணியில் லிற்ரோ எரிவாயுக் கம்பனி, பெற்றோலிய முனையங்கள் கம்பனி, இலங்கை மின்சார சபை மற்றும் இலங்கை முதலீட்டு சபையால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ள பல கருத்திட்டங்கள் நிறுவப்பட்டுள்ளன.
அதிவேக நெடுஞ்சாலைக்கு நுழைவதற்கான வழியாகப் பயன்படுத்தப்படும் கைத்தொழில் வலயத்தின் நடுவில் அமைந்துள்ள, கெரவலப்பிட்டி அதிவேக நெடுஞ்சாலை நுழைவு தொடக்கம் எலகந்த வீதி வரைக்குமான 2.2 கிலோமீற்றர் கொண்ட வீதியை அபிவிருத்தி செய்வதற்கான வேலைத்திட்டமொன்று 2021 ஆம் ஆண்டில் வீதி அபிவிருத்தி அதிகாரசபையால் ஆரம்பிக்கப்பட்டிருப்பினும், எமது நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக நிர்மாணப் பணிகள் பூர்த்தி செய்யப்படவில்லை.
தற்போது மோசமாகப் பழுதடைந்த நிலையிலுள்ள இவ்வீதியை துரிதமாக அபிவிருத்தி செய்ய வேண்டிய தேவை கண்டறியப்பட்டுள்ளது. அதற்கமைய, போக்குவரத்து,நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனையைக் கருத்தில் கொண்டு, குறித்த வீதியைப் போக்குவரத்துப் பொருத்தமான வகையில் துரிதமாகப் புனரமைப்பதற்கும் பின்னர் நீண்டகால தீர்வாக அவ்வீதியை விரிவாக்கம் செய்வதற்கான முறையான கற்கையை மேற்கொண்டு இடைக்கால வரவு செலவுத்திட்ட சட்டகத்தின் கீழ் ஒதுக்கப்பட்டுள்ள நிதியைப் பயன்படுத்தி இவ்வீதியை அபிவிருத்தி செய்வதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.








