(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
சாய்ந்தமருது – மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் நிருவாகத்தினர், சாய்ந்தமருது – மாளிகைக்காடு ஜம்இய்யத்துல் உலமா சபை, சாய்ந்தமருது – மாளிகைக்காடு வர்த்தக சங்கம் மற்றும் சாய்ந்தமருது – மாளிகைக்காடு பிரத்தியேக (டியூசன்) வகுப்பு நடாத்தும் ஆசிரியர்கள், கல்முனை மாநகர சபை ஆணையாளர், சாய்ந்தமருது பிரதேச செயலாளர், சாய்ந்தமருது பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஆகியோருக்கிடையில் சாய்ந்தமருது ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது எடுக்கப்பட்ட தீர்மானங்கள் குறித்து வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
புனித ரமழான் காலத்தில் பின்பற்றப்பட வேண்டிய மார்க்க விழுமியங்கள் பற்றி சாய்ந்தமருது – மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் நிர்வாகத்தினரும் மற்றும் சாய்ந்தமருது – மாளிகைக்காடு ஜம்இய்யத்துல் உலமா சபை, சாய்ந்தமருது – மாளிகைக்காடு வர்த்தக சங்கம், பிரத்தியேக (டியூசன்) நடாத்தும் ஆசிரியர்கள் பொது மக்களுக்கு விடுக்கும் அன்பான வேண்டுகோள்:
- புனித ரமழான் காலத்தில் நோன்பு நோற்றல், அல்குர்ஆன் ஓதுதல், திக்ர் செய்தல், பாவமன்னிப்புக் கோரல், இரத்த உறவுகளைப் பேணுதல், தான தர்மம் செய்தல் போன்ற நற் கருமங்களில் ஈடுபட்டு அல்லாஹவின் பேரருளைப் பெற்றுக் கொள்ளுங்கள்.
- அனைத்துப் பள்ளிவாசல்களிலும் வெளி ஒலி பெருக்கிப் பாவனையை நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஜி.சீ.ஈ . சாதாரண தரப் பரீட்சை முடியும் வரை தவிர்த்துக் கொள்ளுதல்.
- தறாவீஹ் தொழுகைக்குச் செல்லுகின்ற பெண்கள் பாதுகாப்பாகச் செல்லுதல்.
- தேநீர்க்கடைகளை (ஹோட்டல்களை) பிற்பகல் 03.00 மணி வரை திறக்காதிருத்தல்,
- தனியார் வகுப்புக்களை (டியூசன்) மாலை 05.00 மணிக்கு முன் நிறைவடையச் செய்தல். அத்துடன் இறுதிப் பத்தில் மாணவர்கள் முழுமையாக அமல்களில் ஈடுபடும் வண்ணம் மேலதிக வகுப்புக்களை, டியூசன் வகுப்புக்களை நடாத்திருத்தல்.
- சஹர் முடிந்த பிற்பாடு எவரும் வீதி விளையாட்டுக்களில் ஈடுபடாதிருத்தல்.
இவற்றோடு மார்க்கத்திற்கு முரணான, அல்லாஹ்வால் தடுக்கப்பட்ட செயற்பாடுகளிலிருந்து தங்களைப் பாதுகாத்து, புனித நோன்பின் மகத்துவத்தைப் பேணி, இறைவனின் நல்லருளைப் பெற்றுக் கொள்ளுமாறு அன்பாகவும் பண்பாகவும் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். என்றும் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.










