19.02.2026 நடைபெறவுள்ள இலங்கை – சிம்பாப்வே போட்டி தொடர்பில் பொலிஸாரால் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் மற்றும் போக்குவரத்துத் திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.
இது தொடர்பில் இன்று (18) நடைபெற்ற விசேட ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதிப் பாதுகாப்புக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் டப்ளியூ.பி.ஜே. சேனாசீர விளக்கமளித்தார்.
நாளை நண்பகல் 12 மணியளவில் மைதானத்திற்குள் நுழைவதற்கான வாயில்கள் திறக்கப்படும் என்பதால், அந்த நேரத்திற்கு வருகை தந்தால் எவ்வித சிக்கலும் ஏற்படாது என அவர் அங்கு தெரிவித்தார்.
“விசேடமாக ரசிகர்களுக்குச் சொல்கிறோம், 12 மணி முதல் வாயில்களைத் திறக்க எதிர்பார்த்துள்ளோம். இது பகல்-இரவுப் போட்டியாக நடைபெறுகிறது. 15:00 மணிக்கு (பிற்பகல் 3) போட்டி ஆரம்பமாகவுள்ளது. 12 மணிக்கு வாயில்கள் திறக்கப்படும். அந்த நேரத்திற்கு வந்தால் அலைச்சலைத் தவிர்க்கலாம் என்பதுடன் எமது கடமைகளுக்கும் இலகுவாக இருக்கும்.
இலங்கை – சிம்பாப்வே போட்டியிலும், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது நடைமுறைப்படுத்தப்பட்ட விசேட பாதுகாப்பு மற்றும் போக்குவரத்துத் திட்டமே நடைமுறைப்படுத்தப்படும்.
வாகனங்களை நிறுத்த முடியாத வீதிகள் உள்ளன. அவற்றில் 12 மணி முதல் வாகனங்களை நிறுத்த நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.”
அந்த வீதிகள் பின்வருமாறு:
சங்கராஜ மாவத்தை மற்றும் சுமனதிஸ்ஸ மாவத்தை
வின்சென்ட் பெரேரா மாவத்தை
பிரிட்டோ பாபாபுள்ளே பிரதேசம், விகாரை வீதி, கெத்தாராம வீதி
செபஸ்டியன் கால்வாய் வீதி
100 அடி வீதி
ஸ்ரீ போதிராஜ மாவத்தை
மாளிகாவத்தை ஒழுங்கை மற்றும் ஜும்ஆ மஸ்ஜித் வீதி
பிரதீபா மாவத்தை மற்றும் சத்தர்ம மாவத்தை
அத்துடன், போட்டி நடைபெறும் ஆர். பிரேமதாச மைதானத்திற்குள் நுழையும் வீதிகளிலும் வாகனப் போக்குவரத்தைக் மட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, வாகனங்களை நிறுத்துவதற்கு அனுமதி அளிக்கப்பட்ட 6 வாகனத் தரிப்பிடங்கள் உள்ளதாகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மைதான வாகனத் தரிப்பிடம் – 165 வாகனங்கள் – (VIP மற்றும் VVIP அனுமதி அட்டை, ஊடகங்களுக்கு)
சதொச மற்றும் ரயில் முற்றம் – 500 இலகுரக வாகனங்கள் (முச்சக்கர வண்டிகள், வேன்கள், மோட்டார் சைக்கிள்கள், கார்கள்)
செபஸ்டியன் கால்வாய் வீதி (முதலாவது பாலம் முதல் இரண்டாவது பாலம் வரை) – 80 வாகனங்கள்
அப்பிள் தோட்டம் – 150 வாகனங்கள்
கோவில் வீதி – 200 வாகனங்கள்
100 அடி வீதி இருபுறமும் – 150 வாகனங்கள்
இதேவேளை, ரசிகர்களுக்கு ஏதேனும் சிக்கல் இருந்தால் பொலிஸ் அதிகாரிகளிடம் வினவ முடியும் எனவும், அல்லது 0112- 433 333 என்ற தொலைபேசி இலக்கத்தை அழைத்து உதவிகளைப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

February 18, 2026
0 Comment
1 Views









