இலங்கையின் மொத்தப் பணியாளர்களில் 22.8%, அதாவது சுமார் 1.83 மில்லியன் ஊழியர்களின் வேலைப் பாதுகாப்பில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என கொள்கை ஆய்வுகள் நிறுவனம் (IPS) மேற்கொண்ட புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.
தற்போதுள்ள தரவுகளைப் பகுப்பாய்வு செய்வதுடன் மட்டுமன்றி, புதிய உள்ளடக்கங்களை உருவாக்கும் திறன் கொண்ட மேம்பட்ட தொழில்நுட்பக் கருவியாக ‘GenAI’ அடையாளப்படுத்தப்படுகிறது.
2023 ஆம் ஆண்டின் தொழிலாளர் படை கணக்கெடுப்புத் தரவுகளைப் பயன்படுத்தி 2025 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட இந்த அறிக்கையின்படி, நாட்டின் பல்வேறு தொழில்கள் இதன் மூலம் மாற்றங்களுக்கு உள்ளாகும் அபாயம் காணப்படுகிறது.
இந்த ஆய்வின்படி, GenAI தொழில்நுட்பத்தின் தாக்கத்திற்கு உள்ளாகக்கூடிய ஊழியர்களில் 187,000 க்கும் மேற்பட்டோர் மிக அதிக ஆபத்துள்ள மட்டத்தில் உள்ளனர்.
இவர்களில் பெரும்பாலானோர், அதாவது 179,290 பேர் எழுதுவினைஞர்கள் (Clerical) அல்லது அலுவலக உதவியாளர் சேவைகளில் ஈடுபடுபவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர்களது அன்றாடக் கடமைகளில் பெரும்பாலானவை இந்தப் புதிய தொழில்நுட்பத்தின் மூலம் நேரடியாக சவாலுக்கு உட்படுத்தப்படலாம் என ஆராய்ச்சியாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
கூடுதலாக, நிபுணர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் ஏனைய எழுதுவினைஞர்கள் உட்பட சுமார் 142,000 ஊழியர்கள் இத்தொழில்நுட்பத்தின் வளர்ச்சியுடன் அதிகளவில் இதற்கு முகம் கொடுக்க வேண்டியிருக்கும்.
இருப்பினும், நாட்டின் உழைக்கும் சக்தியில் பெரும் பகுதியினருக்கு இத்தொழில்நுட்பத்தினால் ஏற்படும் தாக்கம் குறைந்த மட்டத்திலேயே காணப்படுவதாகவும் அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.










