சுஐப்.எம்.காசிம்-
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஐந்தாவது தேசிய மாநாட்டுக்கான ஏற்பாடுகள், இக்கட்சியின் சிறுபான்மை எம்.பிக்கள் இருவருக்கும் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. வியாழேந்திரன் மற்றும் காதர் மஸ்தான் இருவருமே இக்கட்சியின் சார்பில் தெரிவான எம்.பிக்கள். வீதாசாரத் தேர்தலிலுள்ள விந்தைதான் இவர்களின் வெற்றியைத் தீர்மானித்தது. இவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் மாவட்டங்களில் இக்கட்சிக்கு செல்வாக்கு இல்லை. பேரினவாத நலன்களை அடையாளப்படுத்தியும், இனவாதத்தை உறுதிப்படுத்தியும் புறப்பட்ட ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆரம்பமே, பாரம்பரிய தேசிய கட்சிகளைப் புரட்டிப்போட்டது.
ஆனாலும், வடக்கு, கிழக்கில் இக்கட்சிக்கு வரவேற்பு இருக்கவில்லை. இன்றைய சூழலில், இக்கட்சியின் நிலை அதிகளவு இறக்கத்தில் உள்ளது. போரியல் குற்றச்சாட்டு, குடும்ப ஆதிக்கம், இனவாதச்சாயல் மற்றும் பொருளாதாரத்தின் வீழ்ச்சி உள்ளிட்ட விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளனர் ராஜபக்ஷக்கள். இந்நிலையில், இவர்களை மீண்டும் நாடு எதிர்பார்க்கிறதா? தென்னிலங்கையில் வீழ நேரிட்ட இவர்களால் மீளவும் எழ இயலுமா? இவற்றை பரீட்சிக்கும் வௌ்ளோட்டமாக இம்மாநாடு அமையலாம். மட்டுமன்றி மஹிந்தவின் மவுசை உரசிப்பார்க்கவும் இந்த மாநாடு பயன்படும்.
இவரைத் தவிர, இக்கட்சிக்கு புதிய முதலீடுகள் எதுவும் இல்லை. இதனால்தான், மஹிந்தவின் தலைமையில் மாநாடு நடைபெறுகிறது. இக்கட்சி இன்றுள்ள லட்சணத்தில் வேறொருவருக்கு தலைமையை மாற்றுவது உசிதமானதல்ல. ராஜபஷக்களல்லாத வேறு ஒருவர் தலைவராவதும் தீர்வாகாது. உள்ளதை பாதுகாக்க அல்லது கட்சியின் பலத்தை உரசிப்பார்க்க மஹிந்தவே பொருத்தமானவர். 69 இலட்சம் மக்களின் ஆணையை தாரைவார்த்ததில் நாடு நன்மையடைந்ததோ என்னவோ, பாதிக்கப்பட்டது ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவே.
கூட்டணி உடைந்தமை, அமைச்சுக்கள் குறைந்தமை மற்றும் கட்சியின் எம்.பியான அமரகீர்த்தி அதுகோரள படுகொலை செய்யப்பட்டதெல்லாம் நஷ்டங்கள்தான். நிறைவேற்றதிகாரம் கட்சியை விட்டுப்போனதால் ஏற்பட்ட ஓட்டைகளால் உண்டான நஷ்டங்கள் இவை. இவற்றிலிருந்து மீளும் வழிவகைள் பற்றி மாநாட்டில் மஹிந்த அறிவிக்க வேண்டும். இல்லாவிடின், இன்னமும் பலவற்றை இழக்க நேரிடலாம். ஒரு வகையில், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் எதிர்கால தலைவிதியை தீர்மானிக்கும் மாநாடே இது.
பிரபல்யங்கள் பல ஶ்ரீலங்கா பொதுஜனவில் இணைந்து ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட விரும்புவதாக நாமல் ராஜபக்ஷ அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பில் அடையாளங்காண இயலாத ஆரூடங்கள் உள்ளதாகவே ஆய்வாளர்கள் கருதுகின்றனர். கட்சியின் இந்த மாநாட்டில் துல்லியமாக தீர்மானங்கள் எடுக்கப்படவுள்ளன. பசி வந்தால் பத்தும் பறக்கும் என்பதைப் போல, நாட்டின் பொருளாதார நெருக்கடி ராஜபக்ஷக்களின் ராஜயோகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பௌத்த தேசியவாதத்தின் தலைவனாகக் காட்டிக்கொண்டு இனியும் குடும்பச் செல்வாக்கை உயர்த்தும் கள நிலவரம் தென்னிலங்கையில் இல்லை. புலிப்பீதியைக் காட்டுவதும், முஸ்லிம் அடிப்படைவாதத்தை விளம்பரமாக்குவதும் அரசியலுக்கான உணர்ச்சியூட்டல்களே! இன்றைய சிங்களவர்களின் மனநிலைகளைப் புரிந்துகொள்ளும் தீட்சண்யம் இன்னும் மஹிந்தவுக்கு இருக்கிறது. எனவே, எதிர்பாராத அறிவிப்புக்களே மாநாட்டின் தொனிப்பொருளாக இருக்கும்.
இப்புதிய தொனிப்பொருளுக்கான சூழலை சிறுபான்மைச் சமூகங்கள் ஏற்படுத்தக் கூடாது. ஏற்படுத்தினாலும் அதை, தூக்கிப்பிடிக்கும் திராணியில் மஹிந்தவின் மவுசு இல்லை. பாதுகாப்பையோ அல்லது தேசப்பற்றையோ தூக்கி நிறுத்த முடியாதுள்ளதால், புதிய தொனிதான் இவர்களுக்கு பொருத்தமானது. சர்வதேச உதவிகள் கிடைத்து வரும் சாதக சூழலில், இதை குலைக்க அல்லது குழப்பும் செயற்பாடுகளை விமர்சித்து, தனக்கில்லாவிடினும் எதிரிக்கு நன்மை செல்வதை தடுக்கும்பாணியில் இம்மாநாடு அமையலாம்.