டிட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக, இலங்கையிலுள்ள 10 சிறைச்சாலைகளைச் சேர்ந்த கைதிகள் தங்களது ஒரு வேளை உணவைத் தியாகம் செய்துள்ளனர்.
அந்தவகையில் 34.6 இலட்சம் ரூபா மதிப்பிலான உணவுப் பொருட்களைப் பங்களிப்பாக வழங்கியுள்ளதாக சிறைச்சாலைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சிறைக்கைதிகள் தங்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஒரு வேளை உணவைத் தவிர்த்து, அதன் மூலம் மிச்சப்படுத்தப்பட்ட பெருமளவிலான நிதியை உணவுப் பொருட்களாக வழங்கியுள்ளனர்.
அங்குணகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் 540,679 ரூபாவும் மெகசின் சிறைச்சாலையில் 450,710 ரூபாவும் வெலிக்கடை சிறைச்சாலையில் 454,630 ரூபாவும் மகர சிறைச்சாலையில் 386,010 ரூபாவும் போகம்பரை சிறைச்சாலையில் 367,949 ரூபாவும் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் 258,612 ரூபாவும் மட்டக்களப்பு சிறைச்சாலையில் 209,224 ரூபாவும் குருவிட்ட சிறைச்சாலையில் 195,150 ரூபாவும் மாத்தறை சிறைச்சாலையில் 105,046 ரூபாவும் மொனராகலை சிறைச்சாலையில் 96,471 ரூபாவும் வழங்கியுள்ளனர்.
இலங்கையின் பல பாகங்களிலும் உள்ள கைதிகள் இன, மத பேதமின்றிப் பாதிக்கப்பட்ட நாட்டு மக்களுக்காகத் தங்களது உணவைத் தியாகம் செய்து இந்த மனிதாபிமான உதவியைச் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.










