இஸ்மதுல் றஹுமான்
டுபாய் நாட்டிலிருந்து போதைப் பொருள் வியாபாரத்தை வழிநாடத்தும் “டூம்” என அழைக்கப்படும் ஓஷத் பிரனாந்துவின் போதைப் பொருளை விநியோகிக்கு அவரது தந்தையை 503 கிராம் ஹெரோய்ன் போதைப்பொருளுடன் நீர்கொழும்பு குற்றவியல் விசாரணை பிரிவினர் கைது செய்துள்ளனர். இவரிடமிருந்து போதைப் பொருள் வியாபாரத்தால் பெறப்பட்டதாக சந்தேகிக்கும் 14 இலட்சம் ரூபா பணமும் கைபற்றப்பட்டுள்ளது.
நீர்கொழும்பு குற்றவியல் விசாரணை பிரிவு பொறுப்பதிகாரி சாமர பிரதீப்புக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நீர்கொழும்பு கட்டுவபிட்டிய பிரதேசத்தில் வைத்து சந்தேகநபரான 49 வயது லசந்த பிரதீப் பிரனாந்து கைது செய்யப்பட்டார்.
சந்தேக நபரின் மகனான டூம் எனும் போதைப் பொருள் வியாபாரி மொத்தமாக பெற்றுக்கொடுக்கும் ஹெரோய்னை அவர் வழங்கும் உத்தரவுக்கு இணங்க சிறிய பகட்டுகளாக போதி செய்து மகன் கூறும் இடங்களில் வைப்பதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
சந்தேக நபரிடமிருந்து 12 வங்கி அட்டைகள், 3 கையடக்க தொலைபேசிகள், சிறிய இலத்திரனியல் தராசு, முச்சக்கர வண்டி மற்றும் வேன் ஒன்றையும் பொலிஸார்
கைபற்றியுள்ளன.
கட்டுவபிட்டி வீதியில் ஒரு இலட்சம் ரூபா மாத வாடகைக்கு பெற்றுக்கொண்ட வீட்டில் இருந்தே இந்த போதைப் பொருள் வியாபாரத்தை நடத்தியதாகவும் விசாரணையில் மேலும் அம்பலமாகியுள்ளது.
நீர்கொழும்பு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கே.பீ.கே. பெரேராவின் ஆலோசனையில் நீர்கொழும்பு பொலிஸ் நிலைய தலைமை பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் தல்வத்தவின் வழிநடத்தலில் பொலிஸ் பரிசோதகர் லொகுநாரங்கொட, பொலிஸ் சார்ஜன் மஞ்சுல (60672), பொலிஸ் கான்ஸ்டபல்களான திஸாநாயக்க(37934),தேவக (101279), நளிந்த(80721) ஆகியோர் அடங்கிய பொலிஸ் குழுவினர் கைது செய்துள்ளனர்.
சந்தேகநரை நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தி தடுப்புக் காவல் உத்தரவை பெற்று தடுத்து வைத்து விசாரிக்க பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.










