தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால், பயணிகள் போக்குவரத்துச் சேவைகளை வழங்கும் பேருந்து உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு விசேட அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
நாட்டைப் பாதித்துள்ள மோசமான வானிலை காரணமாகப் பயணிகள் போக்குவரத்துச் சேவைகளை வழங்கும் பேருந்து ஊழியர்கள் பின்வரும் விடயங்களில் அதிக கவனம் செலுத்துமாறு அந்த அறிவுறுத்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மோசமான வானிலை காரணமாக வீதித் தடைகள் நிலவும் சந்தர்ப்பங்களில், பேருந்துகளைச் செலுத்தும் போது பொலிஸ் வீதித் தடைகள் காணப்படுமாயின், அங்கு கடமையில் உள்ள பொலிஸ் அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைத் தவறாமல் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வெள்ளப்பெருக்கு காரணமாக வீதி தெளிவில்லாமல் உள்ள இடங்களில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பேருந்தை உள்ளே செலுத்த வேண்டாம் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
மோசமான வானிலை காரணமாக மாற்றுப் பாதைகளைப் பயன்படுத்தும் போது, பேருந்தில் பயணிக்கும் பயணிகளுக்கு அது குறித்துத் தெரிவிக்க வேண்டும். மாற்றுப் பாதைகளைப் பயன்படுத்தும் போது பயணிகளை அவர்களின் இறுதி இலக்கை நோக்கி அழைத்துச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டால், அது குறித்துத் தெரிவித்து அவர்களை அருகில் உள்ள பிரதான பேருந்து நிலையத்திற்கு அனுப்ப வேண்டும் என்றும், முடிந்த ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் பயணிகளை அவர்களது உரிய இலக்குக்கு அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மழை நிலைமையின் போது வாகனங்களை ஓட்டும் சாரதிகள் பேருந்தின் வேகம் குறித்து விசேட கவனம் செலுத்த வேண்டும். எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பேருந்தை அதிக வேகத்தில் இயக்க வேண்டாம் என்றும், அதிவேக நெடுஞ்சாலைகளில் பேருந்துகளை இயக்கும் போது வழங்கப்பட்டுள்ள நிர்ணயிக்கப்பட்ட வேக வரம்புகளுக்கு உட்பட்டுப் பேருந்தை இயக்க உறுதி செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், மாற்றுப் பாதைகளைப் பயன்படுத்தும் போது அதிக வளைவுகள் கொண்ட வீதிகள், சாய்வு வீதிகள் மற்றும் குறுகிய வீதிகளில் பயணிக்க நேரிடலாம் என்பதால், அது குறித்துச் சாரதிகள் மற்றும் நடத்துநர்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு விசேடமாகக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இந்த மோசமான வானிலை நிலைமையிலும் பயணிகளுக்குப் பாதுகாப்பான மற்றும் தரமான பொதுப் போக்குவரத்துச் சேவையை வழங்குவது பாராட்டத்தக்கது என்று குறிப்பிடப்பட்டுள்ளதுடன், தேவையான எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவைத் தொடர்புகொள்ள அதன் விரைவு அழைப்பு இலக்கமான 1955 உடன் தொடர்புகொள்ளுமாறு அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.










