அரசாங்கத்தால் முன்வைக்கப்படவுள்ள 2026ஆவது நிதியாண்டுக்கான வரவு செலவுத்திட்டம் தொடர்பான உரையை நிதி அமைச்சர் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க எதிர்வரும் 07ஆம் திகதி நிகழ்த்தவுள்ள நிலையில், பாராளுமன்றம் சிறப்புப் பாதுகாப்பு ஆய்வுக்கு உட்படுத்தப்படவுள்ளதாக சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன அறிவித்தார்.
அதற்கமைய, அடுத்த மாதம் 04, 06 மற்றும் 07 ஆம் திகதிகளில் இந்த ஆய்வை மேற்கொள்ளத் திட்டமிடப் பட்டுள்ளது.
பாராளுமன்றம் நேற்று (24) காலை 9.30 மணிக்கு சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் கூடிய நிலையில், இடம்பெற்ற சபாநாயகர் அறிவிப்பின் போதே இந்த அறிவிப்பை விடுத்த அவர் மேலும் கூறுகையில், நவம்பர் மாதம் 07ஆம் திகதி பாராளுமன்ற கட்டடத்தின் உயர் பாதுகாப்பு பகுதிகளும் பாதுகாப்பு ஆய்வுக்குட்படுத்தப் படும். அன்றையதினம் விருந்தினர்களுக்கு மட்டுமே பொது கலரி அனுமதிக்கப்படும். பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வறைகள் மற்றும் அலுமாரிகள் உட்பட முழு பாராளுமன்ற கட்டடமும் பாதுகாப்பு ஆய்வுக்குட்படுத்தப் படும். விருந்தினர்களுக்கான அழைப்பிதழ்கள் நிதி அமைச்சினால் வழங்கப்படும்.
மேலும், சிறப்பு பாதுகாப்புத் திட்டம் அமுலில் இருக்கும். வெள்ளிக்கிழமை பாராளுமன்றத்துக்கு வாகனங்களில் வருகைதரும் போது பாராளுமன்ற உறுப்பினர்கள் சாரதியுடன் வரவேண்டும். அன்று பாராளுமன்ற வாகன நிறுத்துமிடம் மூடப்படும் என்பதால், பாராளுமன்ற உறுப்பினர்கள் வரும் வாகனங்கள் வாகன நிறுத்துமிடத்துக்கு அனுப்பப்படும். அன்றைய தினம் சிறப்பு போக்குவரத்துத் திட்டமும் செயல்படுத்தப்படும்’’ என்றார்










