இலங்கையின் பாராளுமன்ற இராஜதந்திரத்தை மேலும் வலுப்படுத்தல் மற்றும் சர்வதேச ஒத்துழைப்பை வளர்க்கும் வகையில் 10 வது பாராளுமன்றத்துக்கான இலங்கை – பெலாரஸ் மற்றும் இலங்கை – பங்களாதேஷ் பாராளுமன்ற நட்புறவுச் சங்கங்கள் ஸ்தாபிக்கப்பட்டன.
இந்த நட்புறவுச் சங்கங்களை ஸ்தாபிப்பதற்கான இரண்டு கூட்டங்கள் அண்மையில் பாராளுமன்ற வளாகத்தில் சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்னவின் தலைமையில் நடைபெற்றன.
இலங்கை – பெலாரஸ் பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தை புதிதாக ஸ்தாபிப்பதற்கான கூட்டத்தில், சுற்றாடல் அமைச்சர் (வைத்தியர்) தம்மிக பட்டபெந்தி அதன் தலைவராகத் தெரிவுசெய்யப்பட்டார்.
பெலாரஸ் குடியரசின் இலங்கைக்கான தூதுவர், மிகைல் காஸ்கோ (H.E. Mikhail Kasko) இந்நிகழ்வில் அதிதியாக கலந்துகொண்டார்.
இந்தக் கூட்டத்தின்போது, பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்) பத்மநாதன் சத்தியலிங்கம் செயலாளராகவும், பாராளுமன்ற உறுப்பினர் (பேராசிரியர்) சேன நாணாயக்கார நட்புறவுச் சங்கத்தின் பொருளாளராகவும் தெரிவுசெய்யப்பட்டனர்.
இதேவேளை, இலங்கை – பங்களாதேஷ் பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தை மீள ஸ்தாபிப்பதற்கான கூட்டத்தில், புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் (கலாநிதி) ஹினிதும சுனில் செனெவி நட்புறவுச் சங்கத்தின் தலைவராகத் தெரிவுசெய்யப்பட்டார்.
பிரதி அமைச்சர் அர்கம் இல்யாஸ் செயலாளராகவும், பாராளுமன்ற உறுப்பினர் பத்மசிறி பண்டார பொருளாளராகவும் தெரிவுசெய்யப்பட்டனர்.
பங்களாதேஷின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர், அன்டலிப் இலியாஸ் (H.E. Andalib Elias) அவர்கள் அதிதியாக இந்நிகழ்வில் கலந்துகொண்டார்.
இந்த இரண்டு கூட்டங்களின்போதும், இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதன் முக்கியத்துவம் மற்றும் இலங்கைக்கும் அந்தந்த நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது குறித்து கலந்துரையாடப்பட்டது.
நட்புறவுச் சங்கங்கள் ஸ்தாபிக்கப்பட்டமை பாராளுமன்ற இராஜதந்திரத்தை மேம்படுத்துவதிலும், பரஸ்பர புரிதலை ஊக்குவிப்பதிலும், வர்த்தகம், கல்வி, கலாசாரம், சுற்றாடல் மற்றும் மக்கள் தொடர்புகள் போன்ற துறைகளில் ஒத்துழைப்புக்கான புதிய வழிகளை உருவாக்குவதிலும் ஒரு முக்கிய மைல்கல்லாக இருக்கும் என இதன்போது வலியுறுத்தப்பட்டுள்ளது.