ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான கெஹல்பத்தர பத்மேவின் தாய், தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்படும் தனது மகன் தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ரிட் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.
மகனுக்கு எதிராகப் பிறப்பிக்கப்பட்ட தடுப்பு உத்தரவு சட்டவிரோதமானது என அவர் மனுவில் குறிப்பிட்டுள்ளார். அதன்படி, ஆட்கொணர்வு மற்றும் ரிட் நீதிமன்ற அதிகாரத்தின் கீழ் உத்தரவு ஒன்றைக் கோரி இந்த ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
வழக்கின் இறுதி முடிவு எடுக்கப்படும் வரை, கைதியை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு வெளியே உள்ள எந்த இடத்திற்கும் மாற்றுவதைத் தடுக்க, இடைக்கால நிவாரணத்தைக் அவர் கோரியுள்ளார்.
அதன்படி, இந்த விவகாரம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, வழக்கின் விடயங்கள் ஆராயப்பட்டு உறுதிப்படுத்தப்படும் வரை கைதி வேறு இடத்திற்கு மாற்றப்பட மாட்டார் என சட்டமா அதிபர் திணைக்களத்தைச் சேர்ந்த சட்டத்தரணி நீதிமன்றத்தில் உறுதியளித்தார்.
கைதியை திணைக்கள வளாகத்தில் தடுத்து வைத்திருக்கும் போது, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் நடத்தப்படும் அனைத்து விசாரணைகளும் அங்கேயே நடத்தப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.
⚡இந்த வழக்கு எதிர்வரும் 23 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது