இஸ்ரேலில் கட்டுமானத் துறையின் புதுப்பித்தல் துணைத் துறையில் வேலைவாய்ப்புகளுக்கு தகுதியான தொழிலாளர்களைப் பதிவு செய்ய இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் இரண்டு மேலதிக நாட்களை வழங்கியுள்ளது.
பொது புதுப்பித்தல் (General Renovation), பீங்கான் டைலிங் (Ceramic Tiling), மற்றும் பிளாஸ்டரிங் (Plastering) ஆகிய வேலைகளுக்கான பதிவு இன்று (ஒக்டோபர் 03) முதல் 07 ஆம் திகதி காலை 9:00 மணி வரை பணியகத்தின் இணையதளம் (www.slbfe.lk) (www.slbfe.lk) மூலம் நடைபெறும்.
25-45 வயதுக்குட்பட்ட ஆண்கள் இதற்காக விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட தொழிலில் நல்ல அனுபவம் பெற்றிருக்க வேண்டும். இஸ்ரேலில் முன்பு பணிபுரியாதவராகவும், அங்கு வசிக்கும் அல்லது பணிபுரியும் உறவினர்கள் இல்லாதவராகவும் இருக்க வேண்டும்.
மேலும், 3 ஆண்டுகளுக்கு மேல் செல்லுபடியாகும் கடவுச்சீட்டு கட்டாயம். விண்ணப்பதாரர்கள் இஸ்ரேலின் காலநிலை மற்றும் வேலை நிலைமைகளுக்கு உடல் மற்றும் மனரீதியாக தகுதியுடையவர்களாகவும், நாள்பட்ட அல்லது தொற்று நோய்கள் இல்லாதவர்களாகவும், குற்றப் பின்னணி இல்லாதவர்களாகவும் (சுத்தமான பொலிஸ் அறிக்கை) இருக்க வேண்டும்.
குறைந்தபட்சம் 10 வருட பாடசாலைக் கல்வியை முடித்திருக்க வேண்டும் மற்றும் அடிப்படை ஆங்கில அறிவு பெற்றிருக்க வேண்டும்.
மேற்குறிப்பிட்ட தொழில்களுக்கான இறுதி திறன் பரீட்சையில் தோல்வியடைந்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியற்றவர்கள்.
தகுதியானவர்களுக்கு 63 மாத ஒப்பந்த காலத்துடன், மேலதிக நேரக் கொடுப்பனவுடன் மாதம் 1,520 அமெரிக்க டொலர் சம்பளம் வழங்கப்படும்.
இவ்வேலைகளுக்காக www.slbfe.lk இணையதளத்தில் விசேட வலைப் போர்ட்டல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த வேலைகளுக்கான பதிவு, நேர்முகப் பரீட்சை, திறன் பரீட்சை மற்றும் லொத்தர் முறைத் தேர்வு ஆகியவற்றுக்கு எந்தவொரு கட்டணமும் செலுத்த வேண்டாம் என பணியகம் அறிவுறுத்துகிறது.