ஒலுவில் பகுதியில் கைவிடப்பட்டதாகக் கூறப்படும் பெண் சிசுவின் பெற்றோரை நாளை (03) வரை விளக்கமறியலில் வைக்க அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
17 வயது நிரம்பிய இந்தப் பெற்றோர் திருமணமாகாமலே கடந்த ஞாயிற்றுக்கிழமை (28) குறித்த பெண் சிசுவை பெற்றெடுத்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட இருவரும் 17 வயதான திருமணமாகாத காதல் ஜோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தந்தையின் வீட்டார் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தமையால் சிசுவை கைவிட தீர்மானித்ததாக தெரிய வந்துள்ளது.
பின்னர், அவர் தனது உறவுக்கார பெண்ணை தொடர்பு கொண்டு, ஒலுவில் பகுதியில் கைவிடப்பட்ட சிசுவொன்றை தான் கண்டெடுத்ததாகவும் அதனை வளர்க்க முடியுமா எனவும் கேட்டுள்ளார்.
குறித்த பெண்ணும் அதற்குச் சம்மதித்ததையடுத்து, சிசுவின் தொப்புள்கொடி முறையாக வெட்டப்படாததால் அதிலிருந்து இரத்தம் கசிந்துள்ளது.
இதையடுத்து, ஒலுவில் வைத்தியசாலைக்கு சிசு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இதன்போது குழந்தை கைவிடப்பட்டதாக கதை பரவியது.
இந்நிலையில் குழந்தையின் தாய் மற்றும் தந்தையை அக்கரைப்பற்று பொலிஸார் கைது செய்ததோடு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.










