காஸாவின் மிகப் பெரிய நகரான காஸா சிட்டியில் உள்ள வைத்தியசாலையில் இருந்து அனைவரும் வெளியேற வேண்டும் என்று இஸ்ரேல் இராணுவம் உத்தரவிட்டுள்ளது.
காஸா சிட்டியில் வைத்தியசாலை மட்டுமே பாதுகாக்கப்பட்ட இடங்களாகக் கருதப்படும் எனவும், நிவாரண உட்கட்டமைப்புகள் உள்ளிட்ட மற்ற அனைத்து பகுதிகளும் தாக்குதலுக்கு உட்பட்டவை என இதுவரை கூறிவந்த இராணுவம், தற்போது அங்குள்ள ஜோர்தானிய வைத்தியசாலையிலிலிருந்து மக்களை வெளியேறுமாறு உத்தரவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காஸாவில் போரை நிறுத்தும் முயற்சியாக இங்கிலாந்து , கனடா, அவுஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் பலஸ்தீனத்தை தனி நாடாக உத்தியோகபூா்வமாக அங்கீகரித்துள்ளன.
ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் இந்த வாரம் மேலும் பல நாடுகள் இந்த அறிவிப்பை வெளியிட ஆயத்தமாகிவரும் சூழலில், சா்வதேச நாடுகளின் இத்தகைய முயற்சிகளை இஸ்ரேல் அலட்சியம் செய்வதையே இராணுவத்தின் இந்த உத்தரவு காட்டுவதாகக் கூறப்படுகிறது.
காஸா சிட்டியைக் கைப்பற்றுவதற்கான நடவடிக்கையை இஸ்ரேல் தொடங்கி பல நாட்களாகியும் அந்த நகரில் இன்னும் பல்லாயிரக்கணக்கானவா்கள் தங்கியுள்ளனா்.
ஏற்கெனவே சுமாா் இரண்டு ஆண்டுகளாக நடைபெற்றுவரும் போரில் பலத்த சேதமடைந்த அந்த நகரில் தற்போது மக்கள் பஞ்சத்தாலும் பாதிக்கப்பட்டுள்ளனா்.