நேபாளத்தில் இடம்பெற்ற கலவரத்தின் போது பலரின் உயிரை காப்பாற்றிய இலங்கை அமைச்சரவை உறுப்பினர் செந்தில் தொண்டமான் அவர்களுக்கு, தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் அனுப்பிய பாராட்டு கடிதம் 21.09.2025 வழங்கப்பட்டது.
இக்கடிதத்தை தி.மு.க பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ மு. முகமது அப்துல்லா அவர்கள், இ.தொ.காவின் தலைமையகமான சௌமியபவனில் செந்தில் தொண்டமானிடம் நேரடியாக கையளித்தார்.
அந்தக் கடிதத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள்,
“நேபாளத்தின் தலைநகர் காத்மாண்டுவில் போராட்டக்காரர்களால் தீவைக்கப்பட்ட தனியார் விடுதியில் தங்கி இருந்த இந்தியர்களைக் காப்பாற்றிய தங்களது துணிவையும் தியாக உணர்வையும் பாராட்டுகிறேன்.
மானுடத்தின் மீதான பெருங்கருணையே இக்கட்டான தருணங்களில் துணிவாக வடிவெடுக்கிறது என்பதற்கு தங்களது செயற்கரிய தீரச்செயலே சான்று!
தங்களது தியாக உணர்வையும் தீரச்செயலையும் மீண்டும் பாராட்டி வாழ்த்துகிறேன்.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
சௌமியபவனில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கௌரவ மு. முகமது அப்துல்லா அவர்கள்,
“தமிழக முதலமைச்சரின் உத்தரவின் பேரில் இந்தக் கடிதத்தை நேரடியாக இலங்கைக்கு வந்து செந்தில் தொண்டமானிடம் கையளிக்க வந்துள்ளேன்” என தெரிவித்தார்.
இதற்கிடையில் செந்தில் தொண்டமான் அவர்கள்,
“மாண்புமிகு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் தமிழக மக்களுக்கு மாத்திரமல்லாது உலகெங்கும் வாழும் தமிழர்களின் தலைவராகக் காணப்படுகிறார். என் சேவையை அவர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தமைக்கு மனமார்ந்த நன்றி. மேலும், இந்தக் கடிதத்தை பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா அவர்கள் கொண்டு வந்தது எனக்கு பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது” என தெரிவித்தார்.
இந்நிகழ்வில் இ.தொ.கா தவிசாளர் மருதபாண்டி ராமேஸ்வரன், பிரதித் தலைவர் கணபதி கனகராஜ், தேசிய அமைப்பாளர் சக்திவேல், பிரதிப் பொதுச் செயலாளர் செல்லமுத்து, உப தலைவர்களான சிவஞானம், சச்சிதானந்தம், திருக்கேஸ் செல்லசாமி, ராஜாமணி மார்கிரட், போசகர் சிவராஜா, சட்ட ஆலோசகர் மாரிமுத்து, சபைத் தலைவர்கள் வேலு யோகராஜ், ராஜாமணி பிரசாத், ரதி தேவி, பிரதிப் மேயர் யோகா, நோர்வூட் பிரதேச சபை முன்னாள் தலைவர் ரவி குழந்தைவேல் உள்ளிட்ட கட்சியின் முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.










