இலங்கை மின்சார சபையின் (CEB) மறுசீரமைப்புத் திட்டத்தின் மூலம் ஊழியர்களின் உரிமைகளை மட்டுமே அரசு பாதுகாத்துள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்தார்.
பொது நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய ஜனாதிபதி, முந்தைய அரசு இயற்றிய சட்டத்தின் கீழ், இலங்கை மின்சார சபை ஊழியர்கள் இந்த ஆண்டு ஒக்டோபர் இறுதிக்குள் பணிநீக்கம் செய்யப்படவிருந்ததாக கூறினார்.
எனினும், தற்போதைய அரசு அந்தச் சட்டத்தை இடைநிறுத்தி, மாற்று சட்டமொன்றை அறிமுகப்படுத்தியதாக அவர் விளக்கினார்.
“சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருந்தோம். ஆனால், நாங்கள் அதை நிறுத்தினோம். மின்சாரத் துறையைப் பாதுகாத்து, அதை சுயாதீனமாக இயங்க வைக்கும் புதிய சட்டத்தை அறிமுகப்படுத்தினோம். மின்சார சபை ஊழியர்களிடம் நான் கேட்கிறேன், பழைய முறைமையை திருத்துவது குற்றமா? வேலைநிறுத்தம் செய்வது பிரச்சினையா? பழைய முறைமையை திருத்துவது உங்கள் உரிமைகளை மீறுவதாக உள்ளதா? இல்லை. இதன் மூலம், உங்கள் உரிமைகளை நாங்கள் பாதுகாத்துள்ளோம்,” என்று ஜனாதிபதி தெரிவித்தார்.
மேலும், வேலைநிறுத்தத்தில் ஈடுபட விரும்புவோரை சவால் விடுத்த அவர், “இப்படி வேலை செய்ய முடியாது,” என்று கூறினார்.
“நாங்கள் மின்சார சபையை நான்கு பிரிவுகளாகப் பிரித்துள்ளோம். ஊழியர்களுக்கு, எந்தப் பிரிவில் பணியாற்ற விரும்புகிறார்கள் என்பதை முடிவு செய்ய இரண்டு மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
அதில் பணியாற்ற விரும்பாதவர்களுக்கு, இழப்பீடு பெற்று வெளியேறும் வாய்ப்பும் வழங்கப்பட்டுள்ளது,” என்று அவர் மேலும் கூறினார்.