சமூக ஊடகத் தடை மற்றும் அரசாங்க ஊழலுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட Gen Z போராட்டத்தில் உயிரிழந்தவர்களைத் தியாகிகளாக அறிவித்து, அவர்களது குடும்பங்களுக்கு தலா 1 மில்லியன் ரூபாய் (நேபாள ரூபாய்) இழப்பீடு வழங்கப்படும் என நேபாளத்தின் இடைக்கால பிரதமரான சுசீலா கார்கி அறிவித்துள்ளார்.
அவர் பதவியேற்றபின்னர் எடுக்கப்பட்ட முதல் நடவடிக்கை இதுவாகும் என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன் வன்முறையின்போது, பொது மற்றும் தனியார் சொத்துக்களுக்குச் சேதம் விளைவித்தவர்கள் தண்டிக்கப்படுவார்கள் எனவும் சுசீலா கார்கி குறிப்பிட்டுள்ளார்.
மேலும் ஆறு மாதங்களுக்கு மேல் பதவியில் நீடிக்கப் போவதில்லை என்றும் அவர் கூறியுள்ளார்