இஸ்மதுல் றஹுமான்
06 விஷப் பாம்புகளை சட்டவிரோதமாக கொண்டு வந்து கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியே கொண்டு செல்ல முயன்ற ஒரு பெண் விமான பயணியை வியாழக்கிழமை இரவு சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகள் மற்றும் பல்லுயிர், கலாச்சார மற்றும் தேசிய பாரம்பரிய பாதுகாப்புப் பிரிவின் அதிகாரிகள் அடங்கிய குழுவால் கைது செய்யப்பட்டார்.
கொழும்பு வாழைத்தோட்ட பிரதேசத்தைச் சேர்ந்த 40 வயது பெண் வர்த்தகர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
போதைப் பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகள் மற்றும் பல்லுயிர், கலாச்சார மற்றும் தேசிய பாரம்பரியப் பாதுகாப்புப் பிரிவின் அதிகாரிகள் குழுவிற்குக் கிடைத்த புலனாய்வுத் தகவலின் அடிப்படையில் கிறீன் செனல் ஊடாக வெளியே செல்ல முற்பட்டபோது அவரை தடுத்து நிறுத்தி அவரின் பயணப் பொதியை பரிசீலித்த போது இந்த பாம்புகள் கட்டுபிடிக்கப்பட்டன.
வனவிலங்கு மற்றும் தாவரங்கள் கட்டளைச் சட்டத்தின் விதிகள் மற்றும் CITES மாநாட்டின் விதிகளை மீறியே இப் பாம்புகளை எடுத்து வந்துள்ளார்.
இவர் இந்த பாம்பு வகைகளை தாய்லாந்து பெங்கொக் நகரில் விலைக்கு வாங்கி அங்கிருந்து இந்தியா சென்னை நகர் சென்று இண்டிகோ விமான சேவையின் 6ஈ.- 1173 இலக்க விமானத்தில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
அவர் கொண்டுவந்த பயணப் பொதிகள் இரண்டில் மஞ்சள் அனகோண்டா,
ஒரு பந்து மலைப்பாம்பு, ஒரு புள்ளிகள் கொண்ட ராஜா பாம்பு, மற்றும் ஒரு ஹோண்டுரான் பால் பாம்பு உட்பட ஆறு பாம்புகளைக் கொண்டு வந்திருந்தார்.
அவள் இந்தப் பாம்புகளை விற்பனைக்காகக் கொண்டு வந்திருந்தாள், அவை வாங்கப்பட்ட சிறிது காலத்திற்கு பிறகு, அவை பெரிய பாம்புகளாக மாறிவிடும், இதனால் அவற்றை வீடுகளில் வைத்திருப்பது கடினமாக இருக்கும். எனவே, அவற்றை நாட்டின் வனப்பகுதிகளில் விடுவது நாட்டின் சுற்றுச்சூழல் அமைப்பில் கடுமையான பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும், இதுபோன்ற உயிருள்ள விலங்குகளை விமானத்தில் கொண்டு வருவது சட்டவிரோதமானது மற்றும் மிகவும் ஆபத்தானது. இண்டிகோ விமான நிறுவன அதிகாரிகள் சுங்க வளாகத்திற்கு வரவழைக்கப்பட்டு இது குறித்து கடுமையாக எச்சரிக்கப்பட்டனர். மேலும், சுங்க அதிகாரிகள் இந்த பாம்புகளை சுங்க விசாரணைக்குப் பிறகு மீண்டும் ஏற்றுமதி செய்ய உத்தரவிட்டனர்.
இலங்கையில் தற்போது பாம்புகள் செல்லப்பிராணிகளாக வளர்க்கப்பட்டு வரும் நிலையில், அவற்றின் உணவுக்காக ஒரு சிறிய வெள்ளை எலி இனமும் நாட்டிற்கு அதிக அளவில் இறக்குமதி செய்யப்படுவதை சுங்க அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளதாக சுங்க அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.