(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
கிழக்கு மாகாணக் கல்வித் திணைக்களத்தினால் நடாத்தப்பட்டுவரும் பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டுப் போட்டியில் 4X100 மீற்றர், 4X400 மீற்றர் அஞ்சலோட்டம் மற்றும் 110 மீற்றர் தடை தாண்டல் ஆகிய 03 விளையாட்டுப் போட்டிகளிலும் கல்முனை சாஹிரா தேசிய பாடசாலையின் மாணவன் ஜபூர் முஹம்மட் ஆதிப் முதல் இடமான தங்கப் பதக்கத்தினைப் பெற்று, தனது பாடசாலைக்கும், வலயத்துக்கும், பெற்றோருக்கும் பெருமை சேர்த்துள்ளார்.
கிழக்கு மாகாணப் பாடசாலைகளுக்கிடையிலான மாகாண மட்ட விளையாட்டுப் போட்டி மட்டக்களப்பு வெபர் விளையாட்டரங்கில் இடம்பெற்று வருகிறது.
இதில் கல்முனை கல்வி வலயம் சார்பாக கலந்து கொண்ட கல்முனை சாஹிரா தேசிய பாடசாலையின் மாணவன் ஜே. முஹம்மட் ஆதிப் 18 வயது ஆண்களுக்கான பிரிவில் 4X100 மீற்றர், 4X400 மீற்றர் அஞ்சலோட்டம் மற்றும் 110 மீற்றர் தடை தாண்டல் ஓட்டப்போட்டியினை 16.46 செக்கனில் ஓடி முடித்து, இச்சாதனையை நிலை நாட்டி, முதலாமிடத்தினைப் பெற்று, தங்கப் பதக்கத்தினை தனதாக்கிக் கொண்டதோடு மட்டுமல்லாமல், தேசிய மட்டத்துக்கும் தெரிவு செய்யப்பட்டார்.
மாணவனின் வெற்றிக்கு உழைத்த உடற்கல்வி ஆசிரியர் ஏ.எம். அப்ராஜ் றிழா, பயிற்றுவிப்பாளர் எம்.யூ.ஏ. சம்லி, மற்றும் வெற்றிக்காக உறுதுணையாய் இருந்து ஊக்கப்படுத்திய பாடசாலை அதிபர் எம்.ஐ. ஜாபிர் (SLEAS), இணைப்பாடவிதானத்திற்குப் பொறுப்பான பிரதி அதிபர் ஏ.எல்.எம். தன்ஸீல் , பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள், கல்வி சாரா ஊழியர்கள், பாடசாலை அபிவிருத்தி, நிறைவேற்று குழு மற்றும் பழைய மாணவர்கள் ஆகியோருக்கும் இம்மாணவன் இதுபோன்று மென்மேலும் பல சாதனைகள் படைக்க வேண்டும் என்றும் பிரார்த்தித்து, பாடசாலை சமூகத்தினர் நன்றியோடு கலந்த தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளனர்.
இவர் சாய்ந்தமருதைச் சேர்ந்த ஜபூர் – ஹஸ்ஸானா தம்பதிகளின் கனிஷ்ட புதல்வர் என்பதும் குறிப்பிடத்தக்கது.